24 டிகிரி செல்ஷியஸ்! இதமான காலநிலையை இழக்கிறாளா மலையரசி?
24 டிகிரி செல்ஷியஸ்! இதமான காலநிலையை இழக்கிறாளா மலையரசி?
UPDATED : மார் 14, 2024 05:12 AM
ADDED : மார் 14, 2024 02:44 AM

ஊட்டி: கடந்த ஆண்டு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் பருவமழை குறைந்ததால், காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, சமவெளியில் கோடை வெப்பம், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது.
'மலைகளின் அரசி' என வர்ணிக்கப்படும், கோடை வாசஸ்தலமான ஊட்டியில் கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவது, உள்ளூர் மக்களை கவலை அடையச் செய்துள்ளது.
இதில், கோடைக் காலம் துவங்கும் மார்ச் மாதம், பொதுவாக, 21 முதல் 23 டிகிரி செல்ஷியஸ் வரை, ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாவது வழக்கம்.
தற்போது, இதில் மாற்றம் ஏற்பட்டு, 23 முதல் 24 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை, 11 டிகிரியாக உள்ளது.
இதன் காரணமாக, ஏப்., மே., மாதங்களில் அதிகபட்ச வெப்பநிலை, 25 - 27 டிகிரி செல்ஷியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
உலகளாவிய மாற்றம்
நீலகிரி சுற்றுச்சூழல் ஆர்வலர், விஞ்ஞானி ராஜன் கூறுகையில், ''கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய வெப்பநிலை மாற்றம் காரணமாக, நம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும், 1 டிகிரி முதல் 2 டிகிரி 'செல்ஷியஸ் வரை, வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதன் தாக்கம், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் உள்ளது.
கோடைமழை பெய்தால் மட்டுமே, ஊட்டியில் நிலவும் அசாதாரண காலநிலையில் மாற்றம் ஏற்படும். இல்லையெனில், கோடை சீசன் நிலவும், ஏப்., மே மாதங்களில், வெப்பநிலை, 27 டிகிரி 'சி' வரை செல்ல வாய்ப்பு உள்ளது.
மாநில எல்லையில் உள்ள, மஞ்சூர் கெத்தையில், மார்ச் மாதம், 26 'சி' யாக இருந்த வெப்பநிலை, தற்போது, 29 'சி' வரை உள்ளது,'' என்றார்.
மழை வந்தால் மாறும்
சி.பி.ஆர்.,சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு கூறுகையில்,''கேரளா, கர்நாடகா பிற சமவெளி பகுதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்; வெப்பமயம் காரணமாக, கடந்த மூன்றாண்டுகளாக வார இறுதி நாட்களில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
''இதனால், அந்த வாகனங்களில் இருந்து வெளியேறும் 'கார்பன்- டை - ஆக்சைடு' மலையின் சூழலை வெகுவாக பாதித்துள்ளது.
''மேலும், நீலகிரிக்கு உரித்தான சோலைவனங்கள்; மரங்கள் அழிந்து வருவதால், மாறிவரும் சிதோஷ்ண நிலையை சமன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதுவும் ஊட்டியில் வெப்பம் அதிகரிக்க முக்கிய காரணம். கோடைமழை வந்தால் மட்டுமே ஓரளவு மாற்றம் ஏற்படும்,'' என்றார்.

