கோவையில் என்ன ஆச்சு... 45 நாட்களுக்கு இதுதான் பேச்சு! தொகுதி நிலவரம் பற்றி தொடரும் விசாரணை
கோவையில் என்ன ஆச்சு... 45 நாட்களுக்கு இதுதான் பேச்சு! தொகுதி நிலவரம் பற்றி தொடரும் விசாரணை
UPDATED : ஏப் 20, 2024 06:19 AM
ADDED : ஏப் 20, 2024 12:53 AM

கோவை தொகுதியின் முடிவை அறிவதற்கு, அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் பெரும் ஆர்வத்தோடு உள்ளனர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால், அவருக்கு ஆதரவானவர்களும், எதிர்ப்பாளர்களும் கோவை தொகுதியின் நிலவரம் குறித்து, கடந்த சில நாட்களாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணை நேற்று மேலும் தீவிரமடைந்தது.
கோவையில் எத்தனை மணிக்கு எவ்வளவு ஓட்டு பதிவாகியுள்ளது, நகர்ப்புறத்தில் எப்படியிருக்கிறது, கிராமங்களில் ஓட்டுச்சாவடிகளில் கூட்டம் இருக்கிறதா என்று இங்குள்ள கட்சிக்காரர்கள், உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்துக் கொண்டே இருந்தனர். பணம் கொடுத்த ஏரியாக்களில் மக்கள் வந்து ஓட்டுப்போட்டார்களா என்ற விசாரணையே அதிகமாக இருந்தது.
அதேபோல, கோவை மாநகர போலீசாரிடமும், உளவுத்துறையினரிடமும், யாருக்கு சாதகமாக இருக்கிறது என்று, சென்னையிலிருந்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரித்துக் கொண்டே இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஒரு லட்சம் ஓட்டுக்கள் மாயம் என்று பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை கொடுத்த பேட்டியும் வேகமாகப் பரவி, அதைப் பற்றிய விசாரணையும் வேகமெடுத்தது.
கோவை தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் விபரம், இன்று தெளிவாக வெளியாகும் என்பதால், இதை வைத்தும் புதிதாகக் கணக்குப் போடுவதற்குப் பலர் தயாராகவுள்ளனர். ஒவ்வொரு கட்சியினர் போடும் கணக்கும் அவரவர்க்கு சாதகமான விஷயங்களே கணக்கிடப்படும்.
ஆனால் மக்களின் கணக்கு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஜூன் 4 வரை காத்திருந்தே ஆக வேண்டும்.இடையிலுள்ள 45 நாட்களுக்கும் இந்த கணக்கும் விசாரணையும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.
அதுவரையிலும் அரசியல் கட்சியினருக்கும், ஆதரவாளர்களுக்கும் பதற்றத்துக்கு பஞ்சமிருக்காது!
- நமது நிருபர் -

