ADDED : ஆக 04, 2024 03:58 AM

சென்னை: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் யானைகள் எண்ணிக்கை, 102 அதிகரித்துள்ளது. தற்போது தமிழக வனப்பகுதியில் 3063 யானைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா எல்லையோர மாவட்டங்களில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு, மே 23 முதல் 25ம் தேதி வரை நடந்தது. தமிழகத்தில், 26 வனப் பிரிவுகளில் நடத்தப்பட்டது. கணக்கெடுப்பில், 1836 வனத்துறை ஊழியர்கள், 342 தன்னார்வலர்கள் என, மொத்தம் 2178 பேர் ஈடுபட்டனர். இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் வாயிலாக, தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையையும், வாழ்வியல் முறைகளையும் அறிந்து கொள்ள உத வும்.
நேற்று யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
யானைகள் பாதுகாப்புக்காக, தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 2023ல் 2961 ஆக இருந்த யானைகள் எண்ணிக்கை, தற்போதைய கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 3063 ஆக உயர்ந்துள்ளது.
அகத்திய மலை யானைகள் காப்பகம், தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம், யானைகள் வழித்தடங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற, அரசின் நடவடிக்கைகள், யானைகள் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

