திருவனந்தபுரத்தில் காங்கிரசுக்கும் பா.ஜ.,வுக்கும் இடையே தான் போட்டி: சசி தரூர் சொல்கிறார்
திருவனந்தபுரத்தில் காங்கிரசுக்கும் பா.ஜ.,வுக்கும் இடையே தான் போட்டி: சசி தரூர் சொல்கிறார்
ADDED : ஏப் 04, 2024 02:58 AM

கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் தலைநகர் திருவனந்தபுரம் தொகுதியில் காங்., சார்பில் சசிதரூர் நான்காவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த மூன்று முறையும் இவரே வென்றார். இம்முறை எப்படியாவது சசி தரூரிடமிருந்து தொகுதியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இடது ஜனநாயக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், இதே தொகுதியின் முன்னாள் எம்.பி.,யுமான பன்யன் ரவீந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளார்.
இந்தத்தொகுதியில் வேறு எந்த வேட்பாளரையும் அறிவிப்பதற்கு முன்பாகவே இவர் பிரசாரத்தை தொடங்கி விட்டார். இவர்கள் இருவரையும் எதிர்த்து பா.ஜ., சார்பில் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நிறுத்தப்பட்டுள்ளார்.
நேற்று சசி தரூர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதன் பின்னர் அவர் கூறியதாவது: திருவனந்தபுரம் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுவதாக பலரும் கூறுகின்றனர். ஆனால் அதில் எந்த உண்மையும் கிடையாது. காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது.
முந்தைய சில தேர்தல்களிலிலும் இதே நிலைதான் இருந்தது. அதுதான் இப்போதும் தொடர்கிறது. இந்த தேர்தலிலும் இடது ஜனநாயக கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
கையில் ரூ.3000 வங்கியில் ரூ.59,000
இந்நிலையில் கையில் மூவாயிரம் ரூபாயும், வங்கியில் 59 ஆயிரம் ரூபாயும் இருப்பதாக திருவனந்தபுரம் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் இந்திய கம்யூ., பன்யன் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவர் வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து விபரம்:
கையில் மூவாயிரம், மனைவி கையில் இரண்டாயிரம், வங்கியில் 59 ஆயிரத்து 729 என மொத்தம் 64 ஆயிரத்து 729 ரூபாய் உள்ளது. 11 லட்சம் மதிப்பீட்டில் 1600 சதுர அடியில் வீடு, 48 கிராம் தங்கம் உள்ளது. எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் மட்டுமே வருமானம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் எம்.பி.யாக இருந்த காலத்திலும் ஆட்டோவில் பயணம் செய்வார். எதிலும் எளிமையை கையாள்பவர்
-நமது நிருபர்-.

