புதிதாக தேர்வாகியுள்ள கோவை எம்.பி.,யிடம் மக்கள் எதிர்பார்ப்பு! இரு அரசுகளிடமும் பெற வேண்டியது ஏராளம்!
புதிதாக தேர்வாகியுள்ள கோவை எம்.பி.,யிடம் மக்கள் எதிர்பார்ப்பு! இரு அரசுகளிடமும் பெற வேண்டியது ஏராளம்!
UPDATED : ஜூன் 07, 2024 06:05 AM
ADDED : ஜூன் 07, 2024 01:19 AM

கோவையில் 28 ஆண்டுகளுக்குப் பின்பு, தி.மு.க.,வுக்கு எம்.பி., கிடைத்துள்ளதால், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக இருந்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராவார்; அதனால் கோவைக்குப் பல திட்டங்கள் கிடைக்கு மென்று, கொங்கு மண்டலத்திலுள்ள தொழில் அமைப்பினர் பலரும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். அவருடைய வெற்றிக்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றினர்.
ஆனால் எதிர்பாராத விதமாக, அவர் தோல்வியடைந்துள்ளார்; மாநிலத்தில் ஆளும்கட்சியாகவுள்ள தி.மு.க., சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி பெற்று, கோவை எம்.பி.,யாக பொறுப்பேற்கவுள்ளார். இதன் மூலமாக, 28 ஆண்டுகளுக்குப் பின், தி.மு.க.,வுக்கு கோவை எம்.பி.,யாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஒரு வகையில், கோவை மக்களுக்கு ஆறுதல் பரிசாகவுள்ளது.
மத்தியில் ஆளும்கட்சியிடம் கேட்டுப் பெறும் நிலையில் கோவை எம்.பி., இல்லாவிட்டாலும், மாநில அரசிடம் கோவைக்கான தேவைகளை எடுத்துச் செல்ல ஒருவர் கிடைத்துள்ளதாக மக்கள் நினைக்கின்றனர்.
ஏனெனில் இப்போது கோவை மாவட்டத்தில் தி.மு.க.,வுக்கு ஒரு எம்.எல்.ஏ.,வும் இல்லாத நிலையில், வெளி மாவட்ட அமைச்சர்களே, இந்த மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக இருந்தனர்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் சிறை சென்று விட்டதால், பொள்ளாச்சி எம்.பி., மட்டுமே, ஆளும்கட்சியின் பிரதிநிதியாக, அரசு அதிகாரிகள் கூட்டங்களில் பங்கேற்று வந்தார். இப்போது தி.மு.க.,வைச் சேர்ந்தவரே, கோவை எம்.பி.,யாகி விட்டதால், இந்த கூட்டங்களை இவர் வழி நடத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கடந்த 1999-2004க்குப் பின்பு, கோவையில் ஆளும்கட்சி எம்.பி., யாரும் வெற்றி பெறவில்லை. இந்த 20 ஆண்டுகளில், தலா ஒரு முறை இந்திய கம்யூ., மற்றும் அ.தி.மு.க., இரு முறை மா.கம்யூ., ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள் பதவி வகித்துள்ளனர். இவர்கள் அனைவருமே எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் என்பதால், கோவைக்கு எந்தவொரு பெரிய திட்டமும் கிடைக்கவில்லை.
தற்போது, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.,கோவையின் தேவைகளை உணர்ந்து, வளர்ச்சிக்காக குரல் கொடுக்க வேண்டும். இரண்டு அரசுகளுக்கும் இடையில் பாலமாக இருந்து, கோவைக்கு பல திட்டங்களைக் கொண்டு வரவும் முயற்சி எடுக்க வேண்டும்.
உதாரணமாக, கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகளை நீக்கவோ அல்லது மாற்றவோ முதல்வரிடம் பேச வேண்டும்; கோவை மெட்ரோ, கோவை சந்திப்பு, எல் அண்ட் டி பை பாஸ் விரிவாக்கம், கிழக்கு புறவழிச்சாலை, கோவை-கரூர் பசுமை வழிச்சாலை போன்ற திட்டங்கள் குறித்து லோக்சபாவில் பேசி, மத்திய அரசிடம் நிதியைப் பெற வேண்டும்.
அத்துடன், கோவையில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான கோரிக்கைகளையும், நகர வளர்ச்சிக்கு அவசியமான கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்களையும் விரைவாக நிறைவேற்ற முதல்வரிடம் பேச வேண்டும். இவற்றைச் செய்வது தான், லோக்சபா தேர்தல்களில் தொடர்ந்து தி.மு.க.,வை ஆதரிக்கும் கோவை மக்களுக்குச் செய்யும் குறைந்தபட்ச நன்றியாக இருக்கும்.
-நமது நிருபர்-

