நாளுக்கு நாள் அதிகரிக்கும் எத்தனால் தேவை: மக்காச்சோளம் பயிரிடுபவர்களுக்கு லாபம்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் எத்தனால் தேவை: மக்காச்சோளம் பயிரிடுபவர்களுக்கு லாபம்
UPDATED : மார் 28, 2024 04:45 AM
ADDED : மார் 27, 2024 11:55 PM

''பெட்ரோல் விலையை குறைக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாக கொண்டும் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு செயல்பாடுகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது அரசு.
''இதனால், எத்தனால் உற்பத்திக்கு உதவும் மக்காச்சோளத்தை பயிரிடும் விவசாயிகளுக்கு, நிலையான வருமானம் இருக்கும்,'' என, தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் இனப்பெருக்க மையத்தின் இயக்குனர் மற்றும் விஞ்ஞானி ரவிகேசவன் தெரிவித்தார்.
மொலாசஸ்
மேலும் அவர் கூறியதாவது: இந்திய அளவில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக மூன்றாவது முக்கிய பயிராக மக்காச்சோளம் உள்ளது. நம் நாட்டில் தற்போது உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளத்தில், 62 சதவீதம் தீவனமாகவே பயன்படுத்தப்படுகிறது.
விதைப்பில் இருந்து அறுவடை வரை, அனைத்திற்கும் இயந்திரங்கள் இருப்பதாலும், வறட்சியை தாங்கி வளரும் பயிர், மகசூல் அதிகம் கிடைப்பதாலும், விவசாயிகள் பிற பயிரைக் காட்டிலும், மக்காச்சோளத்தை எளிதாக உற்பத்தி செய்ய இயலும்.
பத்து ஆண்டுகளுக்கு முன், 10 - 15 ரூபாயாக இருந்த மக்காச்சோளம், தற்போது கிலோ, 25 ரூபாயாக அதிகரித்துஉள்ளது.
பெட்ரோல் விலை அதிகரித்தபடி செல்வதால், மத்திய, மாநில அரசுகள் 2025ம் ஆண்டுக்குள், பெட்ரோலுடன், 20 சதவீத எத்தனால் கலக்க வேண்டும் என தெரிவித்து உள்ளன.
எத்தனால் கலக்கும் பட்சத்தில், பெட்ரோலின் விலை குறையும்; கார்பன் வெளியீடும் குறையும். எத்தனால் உற்பத்திக்கு, மக்காச்சோளத்தின் தேவை அதிகரிப்பதால், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
கரும்பில் உள்ள மொலாசஸ் பயன்படுத்தியும் எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் உற்பத்தி செலவு அதிகம் என்பதால், எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளத்தை மாற்றாக பார்க்கின்றனர்.
வரும் ஆண்டுக்குள், 10.5 பில்லியன் லிட்டர் எத்தனால் தேவை. இதில், 10 சதவீதம் மட்டுமே நாம் உற்பத்தி செய்கிறோம். கடந்த 2022 - 23 நிலவரப்படி, தமிழகத்தில் 2.47 ஏக்கர் நிலத்தில், 7,000 கிலோ உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தமாக, 76 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில், தமிழகம் மற்றும் ஆந்திராவில் மக்காச்சோளம் உற்பத்தி திறன் அதிகம்.
அதிக மகசூல் கிடைக்கும், வீரிய ஒட்டு ரகங்கள் வேளாண் பல்கலையிலேயே கிடைப்பதால், விவசாயிகள் இதை உற்பத்தி செய்யலாம்.
பயிற்சி
பொதுவாக, 2.47 ஏக்கர் நிலத்தில், 1,500 லிட்டர் எத்தனால், மக்காச்சோளத்தில் இருந்து உற்பத்தி செய்ய முடியும்; அதிக செலவு இருக்காது. மக்காச்சோளம் விதை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள், நல்ல நிகர லாபத்தை எடுக்க இயலும்.
விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட்டால், நல்ல லாபம் பெற முடியும். வேளாண் பல்கலையில் இதற்கான பயிற்சியை வழங்க விஞ்ஞானிகள் தயாராகவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது நிருபர் -

