ADDED : ஏப் 23, 2024 12:59 AM

சென்னை: வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான சோதனைகளை, தனியார் மையங்களிலும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. பல்வேறு மாநில அரசுகளில், இந்த புதிய சட்டத்தின் சிறப்புகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
உயிரிழப்பு
வாகன பாதுகாப்பு வடிவமைப்பில் மாற்றம், சாலை பாதுகாப்பு விதிமீறல்களுக்கான அபராதங்கள் அதிகரிப்பு, ஓட்டுனர் உரிமம் வழங்குவது, 18 வயது நிரம்பாதவர்கள் வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்பட்டால், பெற்றோர் அல்லது பாதுகாவலராக இருக்கும் உறவினருக்கு, 25,000 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
அதேபோல், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் வாயிலாக ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிப்பது, ஓட்டுனர் உரிமம் பெற பயிற்சி பெறுவது, சோதனைக்கு உட்படுத்துவது, வாகனங்களுக்கான எப்.சி., தகுதிச் சான்று பெற விண்ணப்பிப்பது போன்ற வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன.
முடிவு
இந்த புதிய வசதிகளை வரும் ஜூன் 1 முதல் மத்திய அரசு படிப்படியாக, அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த உள்ளது.
இருப்பினும், சோதனைகள் முடிந்த பிறகே, ஆவணங்களை அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு படிப்படியாக கொண்டு வருகிறது.
ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகனங்களுக்கான சோதனைகள் மேற்கொள்ள, தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிப்பது குறித்து, புதிய வாகன சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இது குறித்து தமிழக போக்குவரத்து ஆணையரகம் சார்பில், எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

