sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

நொய்யல் மறு சீரமைப்பு.. இன்றைய தலைமுறைக்கு காரணம் தெரியுமா?

/

நொய்யல் மறு சீரமைப்பு.. இன்றைய தலைமுறைக்கு காரணம் தெரியுமா?

நொய்யல் மறு சீரமைப்பு.. இன்றைய தலைமுறைக்கு காரணம் தெரியுமா?

நொய்யல் மறு சீரமைப்பு.. இன்றைய தலைமுறைக்கு காரணம் தெரியுமா?

3


UPDATED : ஏப் 17, 2024 07:45 AM

ADDED : ஏப் 17, 2024 12:46 AM

Google News

UPDATED : ஏப் 17, 2024 07:45 AM ADDED : ஏப் 17, 2024 12:46 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நதிகள் இணைப்பைப் பற்றி. எத்தனையோ தேர்தல் வாக்குறுதிகளை இந்த தேசம் பார்த்திருக்கிறது. ஆனைமலையாறு-நல்லாறு அணைகள் கட்டப்படும் என்று 30 ஆண்டுகளாக, எல்லாத் தேர்தல்களிலும் வாக்குறுதி தரப்படுகிறது. ஆனால் ஒரு நதி மறு சீரமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி தரப்படுவது, இது தான் முதல் முறை.

கோவை பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை வெளியிட்டுள்ள 'என் கனவு நமது கோவை' என்ற தலைப்பில், 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்துடன், கோவை தொகுதிக்கு 100 வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார். அதில் ஒன்று தான், நொய்யல் நதி மறுசீரமைப்பு. இந்த நதியின் தண்ணீரை சமீபத்தில் ஆய்வு செய்ததில் கிடைத்த தகவல் தான், இந்த மறுசீரமைப்புத் திட்டத்துக்கு முதல்காரணம்.

ஒரு லிட்டர் தண்ணீரில், 500 மில்லி கிராம் TDS (TOTAL DISSOLVED SOLIDS) இருந்தால், அது பயன்பாட்டுக்கு உகந்தது; ஆனால் நொய்யல் தண்ணீரில், 2,160 மி.கி., அளவுக்கு TDS உள்ளது. இதனால் நிலத்தடி நீரும் மெல்ல மெல்ல விஷமாகி வருகிறது. அதிலிருந்து மீட்பதற்காகவே, தமிழக பா.ஜ., முயற்சியால் ரூ.990 கோடி மதிப்பில் நொய்யல் மறு சீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அந்த நிதி சரியாகப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டு, நொய்யலை துாய்மைப்படுத்தி, மாசற்ற நதியாக மாற்றப்படும் என்று அண்ணாமலை உறுதியளித்துள்ளார். உண்மையில் இது வரவேற்கத்தக்க வாக்குறுதி என்றாலும், இந்த நிலையை ஏற்படுத்தியதற்கு வருத்தப்படாமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில், கோவை நகரின் ஒரே நீர் ஆதாரமான நொய்யல் நதி, கழிவுநீர் கால்வாயாகிவிட்டது.

நொய்யல் பாயும் குளங்கள் அனைத்தும் சாக்கடை சங்கமமாகி விட்டன. ஆனால் இந்த நதியைப் பற்றியும், அது எப்படியிருந்து எப்படி மா(நா)றியிருக்கிறது என்பதும் இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாது. மற்ற நகரங்களில் எல்லாம் குளங்களும், ஏரிகளும் வற்றி வறண்டு இருக்கும் போது, இங்குள்ள குளங்களில் மட்டும் இப்போதும் தண்ணீர் ததும்பி நிற்பதற்கான காரணமும் தெரியாது.

இந்த குளங்களில் இப்போது நிரம்பியிருக்கும் தண்ணீரில், நொய்யல் நதிக்காக சூழல் ஆர்வலர்கள் பலரும் வடித்த கண்ணீரும், குளங்களைத் துார் வாருவதற்கு கரம் கொடுத்த பல்லாயிரக்கணக்கான கோவை மக்களின் வியர்வைத் துளிகளும் கலந்திருக்கின்றன. இன்றைக்கு கோவை நகரில் எத்தனையோ சூழல் அமைப்புகள், குளங்களைக் காப்பதற்குக் களமிறங்கி, இடைவிடாது செயலாற்றி வருகின்றன.

சிறுதுளியின் பெரும்பணி!


கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, கவுசிகா நீர்க்கரங்கள், சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்புக்குழு, அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்பு என எத்தனையோ அமைப்புகள், அர்ப்பணிப்பு உணர்வுடன் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தாய் அமைப்பாக இருந்து, இந்த சூழல் பணிக்கு விதை போட்டது 'சிறுதுளி' அமைப்பு.

நொய்யல் நதி, கோவைக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பல்வேறு ஓடைகளும், அருவிகளும் இணைந்து நதியாக உருவெடுக்கிறது. இங்கிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில், 165.38 கி.மீ., துாரம் பயணித்து, நொய்யல் என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. இதில் கோவை மாவட்டத்தில் மட்டுமே, மொத்தம் 24 குளங்களை இது நிறைத்துச் செல்கிறது.

மொத்தமாக இதில் 31 குளங்களும், 23 அணைக்கட்டுகளும் உள்ளன. ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதியாக, கோவை மக்களுக்குக் குடிநீராகப் பயன் படுத்தும் அளவுக்கு, துாய்மையான தண்ணீருடன் ஓடிக் கொண்டிருந்த நொய்யல் நதி, பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயத்துக்கும் உதவியுள்ளது. இப்போது அது 3630 ஏக்கராகக் குறைந்து விட்டது. அதுவும் ஆண்டுக்கு ஆண்டு சுருங்கிக் கொண்டிருக்கிறது.

அதற்கு பல காரணங்கள் உள்ளன; நதியின் தடம் மறிக்கப்பட்டது; ஓடைகள் அழிக்கப்பட்டன; குளங்கள் குடியிருப்புகளாக மாறின. அரசு கட்டடங்களும் அடுத்தடுத்து முளைத்தன. நகரின் சாக்கடை அனைத்தும் எங்குமே சுத்திகரிக்கப்படாமல், நதியில் நேரடியாக கலக்கப்பட்டன; சாயக்கழிவுகள் சங்கமித்தன; ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்தன. கால்வாய்கள், குளங்கள் குப்பைத்தொட்டிகளாக மாற்றப்பட்டன.

இப்படியாக, கொஞ்சம் கொஞ்சமாக நதியின் மூச்சைப் பிடித்து, மரணிக்க வைத்து, அதற்கு சமாதி கட்டுகிற வேலையை, அரசாண்டோரும், அக்கறையே இல்லாத பொது மக்களும் சேர்ந்தே செய்தனர். நீர் நிலைகள் காய்ந்து போன போது, நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்குப் போனது. கால் நுாற்றாண்டுக்கு முன்பு, ஆயிரத்து 200 அடி போட்டாலும் கோவையில் வெறும் காத்துதான் வருமென்ற நிலை.

அப்போது தான் கடந்த 2003 ல், நொய்யல் மீட்பு என்ற முழக்கத்துடன் 'சிறுதுளி' தன் பெரும் பயணத்தைத் துவக்கியது. குளங்களைத் துார் வாரவும், கால்வாய்களை மீட்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மக்களிடம் நொய்யலை மீட்பதன் அவசியத்தை வலியுறுத்தவும் களமிறங்கி காரியங்களைச் செய்தது. நொய்யல் யாத்திரை துவங்கி, குளங்கள் துார் வாருவது வரை இடைவிடாது இயங்கியது.

அதன் பலனாக, அரசும் இதில் கவனத்தைத் திருப்பியது; அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நொய்யல் மீட்புப் பணியில் பெயரளவுக்காவது கை நனைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். கோவை குளங்களை துார் வாரவும், தடுப்பணைகள் கட்டவும், அரசால் நிதி ஒதுக்கப்பட்டது. அத்துடன் தன்னார்வ அமைப்புகள், கோவை நிறுவனங்கள் பங்களிப்புடன் நகரிலுள்ள குளங்கள் துார் வாரப்பட்டன.

பத்தாண்டுகளுக்கு முன்பு, ஞாயிறுதோறும் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம் என பல்வேறு குளங்கள் துார் வாரும் பணியில், பல ஆயிரம் கோவை மக்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்றனர். வாலாங்குளம், குமாரசாமி குளம் உள்ளிட்ட சில குளங்களில் இருந்த பல ஆயிரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, அங்கிருந்தோருக்கு அரசால் மாற்று வீடுகள் கொடுக்கப்பட்டன.

அதனால் தான், இந்த கோடையிலும் கோவை குளங்களில் தண்ணீர் நிற்கிறது. அதை வைத்தே, கோவை நகருக்குள் உள்ள ஒன்பது குளங்களை, பராமரிப்புக்கு மாநகராட்சி எடுத்து, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், எட்டு குளங்களில் ரூ.480 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்துள்ளன. இப்போது நகரிலுள்ள பல லட்சம் மக்களுக்கு, இந்த குளங்கள் பொழுது போக்கிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பில் இது புதுசு!


மத்திய, மாநில அரசுகளின் தலா 50 சதவீத நிதிப்பங்களிப்பில், இத்தனை கோடி செலவழித்தும், குளத்தில் கலக்கும் கழிவுநீரைத் தடுப்பதற்கு எந்தவிதமான முயற்சியும் எடுக்கப்படவில்லை. மாறாக, குளங்களில் நீர் நிற்கும் பரப்பு மண்ணால் மூடப்பட்டு, கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தனை கோடி நிதியும் விழலுக்கு இறைத்த நீராக மாறியுள்ளது. மாநகர மக்களுக்குப் பொழுதுபோக்கு இடங்கள் அவசியம் தான். அதற்கும் மேலாக நிலத்தடி நீர் மட்டத்தையும், தரத்தையும் உயர்த்துவது மிக அவசியம். அதற்கு'மைக்ரோ லெவல்' சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்க வேண்டும்; வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் உள்ள இயற்கை முறை சுத்திகரிப்பு வழிமுறைகளையும் பயன்படுத்தி, நதியைத் துாய்மையாக்க வேண்டும்.

இதற்காகத் தரப்பட்டிருப்பது தான் அண்ணாமலையின் நொய்யல் மறுசீரமைப்பு வாக்குறுதி!

மலையின் மடியில் கோவை!


''நாங்கள் பாலை நிலத்திலேயே துாய்மையான தண்ணீரைச் சேகரிக்கிறோம். கோவை, மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் இருக்கிறது. மலையில் பெய்யும் மழையின் நீர், கீழே வந்துதான் ஆக வேண்டும். பாத்திரத்தை வைத்துப் பிடிப்பது தான் உங்கள் வேலை. குளங்களை அதற்குத் தயார் படுத்துங்கள்!''

-ராஜேந்திர சிங், இந்தியாவின் தண்ணீர் மனிதர்

கவுசிகா நதி சீரமைப்புக்கும் நிதி

காவிரியின் கிளை நதி, நொய்யல்; அதன் கிளை நதி கவுசிகா. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குருடி மலையில் உற்பத்தியாகி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 54 கி.மீ., பயணித்து, நொய்யலில் கலக்கிறது. இடையில் 12 கிராம ஊராட்சிகள், 8 பேரூராட்சிகளில் பல கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளை நிறைத்து வந்த இந்த நதி, உருத்தெரியாமல் அழிக்கப்பட்டது. கவுசிகா நீர்க்கரங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் முயற்சியால், இந்த நதி கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டு, இப்போது மழைக்காலங்களில் வெள்ளம் பாய்ந்து, குளங்களை நிரப்பத் துவங்கியுள்ளது. இதைச் சீரமைக்கவும் நிதி ஒதுக்குவதாக அண்ணாமலை தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



அரசே செய்த ஆக்கிரமிப்பு!

நொய்யல் குளங்களில், மின் வாரியத்தால் தான் அதிகளவு இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள் ளன. கிருஷ்ணாம்பதியில் 3.07 ஏக்கர், வாலாங்குளத்தில் 4.20 ஏக்கர், சூலுார் குளத்தில் 2.85 ஏக்கர், நரசாம்பதி குளத்தில் 5.06 ஏக்கர் இடங்கள் எடுக் கப்பட்டு, துணை மின் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவை தவிர்த்து, கிருஷ்ணாம்பதி குளத்தில் 20 ஏக்கர், வேளாண் பல்கலைக்கு எடுக் கப்பட்டுள்ளது. செல்வம்பதி குளத்தில், 5.88 ஏக்கர் பரப்பளவுக்கு, சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் சார்பில் குடோன் கட்டப்பட்டுள்ளது. வாலாங்குளத்தில் 4 ஏக்கர் இடத்தில், அரசு போக்கு வரத்துக்கழகப் பணிமனையும், 6.25 ஏக்கர் இடத்தில், ரயில்வே குடியிருப்பும், இருப்புப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.








      Dinamalar
      Follow us