தமிழகம் முழுக்க தி.மு.க., எதிர்ப்பு மனநிலை: விருதுநகர் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரன் பேட்டி
தமிழகம் முழுக்க தி.மு.க., எதிர்ப்பு மனநிலை: விருதுநகர் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரன் பேட்டி
ADDED : ஏப் 05, 2024 12:01 AM

விருதுநகர் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரன் அளித்த சிறப்பு பேட்டி...
தந்தை விஜயகாந்த் இல்லாமல் முதல் தேர்தல். எப்படி உள்ளது கள நிலவரம்.
விஜயகாந்தின் உயிரும் உருவமும் என்னுடன் இல்லையே தவிர, அவரின் ஆன்மா, அவரின் தாக்கம், அவரின் வைப்ரேஷன் என்னை வழிநடத்துகிறது. எனக்கு வழிகாட்டுகிறது.என் தந்தை போலவே நானும் மக்கள் நலனில் ஏழைகள் நலனில் தாய்மார்கள் நலனில் அக்கறை கொண்டவன் என்பதை தொகுதி முழுக்க எனக்கு கொடுக்கும் அன்பிலும் அரவணைப்பிலும் வரவேற்பிலும் உணர்கிறேன். விருதுநகர் தொகுதி மக்கள் என்னை அவர்கள் வீட்டுப்பிள்ளையாக பார்க்கின்றனர்.
2021 சட்டசபை தேர்தலில் 0.44 சதவீதம் ஓட்டு பெற்ற தே.மு.தி.க.,விற்கு 2024 தேர்தலின் வெற்றி வியூகம் என்ன
மாற்றம் ஒன்றே மாறாதது. தமிழகத்தின் கடந்த நான்கு லோக்சபாதேர்தலின் முடிவுகளை பார்த்தால் மக்கள் ஒவ்வொரு ஐந்தாண்டும் மாற்றத்தை விரும்பியேஓட்டளித்திருக்கின்றனர். 2021 அரசியல் சூழலும் களமும் வேறு.2024 தேர்தலின் சூழலும் மக்கள் மனநிலையும் வேறு.இன்று மக்கள் நமக்காக வாழ்ந்த விஜயகாந்த் என்ற மாமனிதனை புரிந்துகொள்ளாமல் வாய்ப்பளிக்காமல் போய்விட்டோமே என வருந்துகின்றனர். தமிழகம் முழுக்க தி.மு.க., எதிர்ப்பு மனநிலை அதிகமாக உள்ளது. அ.தி.மு.க.,வோடு மக்களோடு கைகோர்த்து வகுத்திருக்கும் எங்கள் வெற்றி வியூகம் தேர்தல் முடிவில் தெரிய வரும்.தே.மு.தி.க.,விற்கு இனி ஏறுமுகமே.
2021 சட்டசபை தேர்தலின் போது கேட்ட சீட் தரவில்லை என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியை வெளிப்படையாக எதிர்த்து பேசினீர்கள். இப்போது கூட்டணி வைத்துள்ள சூழலில் ஆதரவு எப்படி உள்ளது.
இக்கூட்டணி ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரால் ஏற்படுத்தப்பட்ட ராசியான கூட்டணி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூவரின் ஆசியுடன் தேர்தலில் நிற்கிறேன். முன்னாள் முதல்வர் பழனிசாமிநான் வெற்றி பெற வேண்டும் என தொண்டர்களுக்கு கட்டளை இட்டுள்ளார். அவர்களும் களத்தில் கடுமையாக உழைக்கின்றனர்.
நடிகர்கள், பிரபலங்களுக்கான அரசியல், தமிழகத்தில் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளதாக கருதுகிறீர்களா.
அரசியல் ஒரு சேவை. அரசியலில் இருப்பவர்களின் நோக்கத்தை பார்க்க வேண்டுமே தவிர அவர்கள் சார்ந்துள்ள துறையை வைத்து கணிப்பது தவறு.அதில் நடிகர்களும் பிரபலங்களும் அடக்கம்.நான் விஜயகாந்தின் மகன். பட்டதாரி. சொந்தமாக தொழில் செய்கிறேன். என் நோக்கமும் எண்ணமும் மக்கள் சேவையே. நான் அரசியலால் பிழைக்க வந்தவன் அல்ல. மக்களுக்காக உழைக்க வந்தவன்.
விருதுநகர் லோக்சபா தொகுதியில் உங்களுக்கு மக்கள் ஆதரவு, வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது.
சிலர் அதிகார பலம், பணபலத்தை நம்பி தேர்தலில் நிற்கின்றனர். நான் மக்கள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறேன். ஏப். 19ல் விருதுநகர் தொகுதி மக்களின் முரசு சின்னத்தையே தேர்ந்தெடுப்பர்.
தே.மு.தி.க., தொடர்ந்து விருதுநகர் தொகுதியை முயற்சிக்கிறது. ஆனால் லோக்சபாவில் இருமுறையும் தோற்றுள்ளதே.
தேர்தலில் தோற்காத அரசியல் கட்சிகள் இந்தியாவில் உண்டா. விருதுநகர் என் தந்தை விஜயகாந்த பிறந்த தொகுதி.என் தாத்தா அழகர்சாமி ஊர்.என் பாட்டி ஆண்டாள் ஊர்.எங்கள் குலதெய்வம் வீரம்மாள் இந்த விருதுநகர் தொகுதியில் தான் உள்ளது.நான் இந்த மண்ணின் மைந்தன்.முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தம், முயற்சி என்பது அறிவாளிக்கு சொந்தம் என்பது என் தந்தையின் வாக்கு.
2019ல் உங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தீர்கள். இப்போது நீங்களே வேட்பாளர். பிற வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய செல்வீர்களா?
விருதுநகர் தொகுதி மக்களை முழுமையாக சந்திக்கவே நேரம் சரியாக இருக்கிறது. எனக்கும் மற்ற தொகுதிகளுக்கு பிரசாரத்துக்கு போக ஆசை தான். ஆனால் இந்த முறை இயலவில்லை.என் வெற்றியை என் தந்தை கோயிலில் சமர்பிக்க ஓடிக்கொண்டிருக்கிறேன்.
குடும்ப கட்சி போன்ற பிம்பம் தே.மு.தி.க.,வுக்கு உள்ளதே.
தே.மு.தி.க.,வின் வேட்பாளர் தேர்வையும், தி.மு.க.,வின் வேட்பாளர் தேர்வையும் ஒப்பிட்டு பாருங்கள். உண்மை புரியும்.தேர்தல் களத்தில் மக்களை சந்தித்து ஓட்டுக்கள் பெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் போது அது குடும்ப அரசியலுக்குள் வராது.
எம்.பி., ஆகும் பட்சத்தில் தேசிய அளவில் கூட்டணி இல்லாத சூழலில் எப்படி தொகுதிக்கு தேவையானவற்றை பெற்று தருவீர்கள்.
தேசிய அளவில் யார் வந்தால் என்ன, விருதுநகர் மக்கள் பிரதிநிதியாக லோக்சபாவில் குரல் கொடுப்பேன்.
பட்டாசு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பீர்களா.
நிச்சயமாக. பட்டாசு தொழிலும் முக்கியம், பாதுகாப்பும் முக்கியம் என்பதே என் நிலைப்பாடு.முதலில் சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி சட்ட சிக்கல், தடையை நீக்க வழி செய்ய வேண்டும். பட்டாசுக்கான ஜி.எஸ்.டி., குறைக்கப்பட வேண்டும். அடுத்து நுாறு சதவீதம் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சீன பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும்.லஞ்சமில்லா, ஊழலில்லா அணுகுமுறையால் இவை அனைத்தையும் நிறைவேற்றி நடத்தி காட்ட முடியும்.

