மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்: நடிகர் பாக்யராஜ்
மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்: நடிகர் பாக்யராஜ்
UPDATED : டிச 13, 2025 08:26 PM
ADDED : டிச 13, 2025 08:27 PM
பெங்களூரு:
''நிறைய படிப்பது முக்கியமல்ல; மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்,'' என்று, தமிழ் புத்தக திருவிழாவில் நடிகர் பாக்யராஜ் பேசினார்.
பெங்களூரு தமிழ் புத்தக திருவிழாவில் , 'புத்தகமே பேசு' என்ற தலைப்பிலான சிந்தனை களத்தில் நடிகர் பாக்யராஜ் பேசியதாவது:
புத்தகம் படிக்கும் பழக்கத்தை அனைவரும் வளர்த்து கொள்ள வேண்டும். புத்தகம் தொடர்ந்து படிப்பது அறிவை வளர்ப்பதுடன், அதில் உள்ள கருத்துகளை அனைவரிடம் செல்ல முடியும். புத்தகம் படிப்பதன் மூலம் பல மாநிலங்களின் கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களையும் கற்று கொள்ள முடியும். எனக்கு இவ்வுலகில் மிகவும் பிடித்தவர்கள் ஆசிரியர்கள்.
தைரியம் வேண்டும்
தன்னிடம் படிக்கும் மாணவர்களை முன்நோக்கி அழைத்து செல்வதுடன், வாழ்க்கை பாடத்தையும் எடுத்து சொல்ல கூடியவர். எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களிடம் இருந்து நிறைய கற்று கொண்டு உள்ளேன். வாழ்க்கையில் முன்னேற ஒரு விஷயத்தை கையில் எடுத்து முயற்சிக்க வேண்டும். தோற்று விடுவோம் என்ற பயம் இருக்க கூடாது. தோற்றாலும் பரவாயில்லை என்ற தைரியம் இருந்தாலே போதுமானது.
படிப்பில் எல்லாரும் முதலிடம் வர முடியாது. தங்களிடம் உள்ள திறமைகளை பயன்படுத்தி முன்னேற்ற பாதையில் செல்லலாம். நாம் எவ்வளவு படித்தாலும், மற்றவர்களுக்கு உதவும் மனநிலை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் படித்தும் பிரயோஜனம் இல்லாமல் போய் விடும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவி பூர்ணிமா, சிறு பிள்ளைகளாக இருந்த மகன் சாந்தனு, மகள் சரண்யா ஆகியோருடன், பெங்களூருக்கு சினிமா சூட்டிங்கிற்கு வந்தார்.
காவிரி தொடர்பான பிரச்னை நடந்த போது, தமிழக பதிவெண் கொண்ட காரில் எனது மனைவியும், பிள்ளைகளும் வந்தால், காரை சிலர் துரத்தினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க டிரைவர் கிராமங்கள் வழியாக காரை ஓட்டி சென்றார்.
நகரில் இருந்து 40 கி.மீ., துாரத்தில் ஒரு கிராமத்திற்குள் சென்று நின்று விட்டார். எங்கு செல்வது என்றும் தெரியவில்லை. அங்கு வந்த ராஜண்ணா என்பவர், எனது மனைவி, பிள்ளைகளை அவரது வீட்டில் தங்க வைத்து பாதுகாப்பு கொடுத்தார். அவரை இன்னமும் என்னால் மறக்க முடியாது. இது தான் மனிதநேயம்.
நீங்கள் இந்தியரா?
இதுபோல நான் ஒரு முறை குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலா சென்ற போது, பஸ்சில் பயணம் செய்தோம். பஸ்சில் கடைசியாக ஏறிய பெண்ணிற்கு, இருக்கை இல்லை. நின்று கொண்டு வர கண்டக்டர் அனுமதி மறுத்தார்.
''விமானத்தை பிடிக்க சென்ற அந்த பெண், பலரிடம் கெஞ்சியும் யாரும் இடம் தரவில்லை. எனது மகள் இருக்கையை அந்த பெண்ணிற்கு விட்டு கொடுத்தேன். எனது பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னொரு பெண், 'என்னை பார்த்து நீங்கள் இந்தியரா' என்று கேட்டார்.
நாம் செய்த சிறு உதவி நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கிறதே என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். இதனால் அனைவரும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

