காலாண்டுத் தேர்வின் போது திறன் மேம்பாட்டு பயிற்சி; ஆசிரியர்கள் கொந்தளிப்பு
காலாண்டுத் தேர்வின் போது திறன் மேம்பாட்டு பயிற்சி; ஆசிரியர்கள் கொந்தளிப்பு
UPDATED : செப் 16, 2025 12:00 AM
ADDED : செப் 16, 2025 11:03 AM

மதுரை:
காலாண்டு தேர்வு நடக்கும்போது ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செப்., 15 முதல் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு துவங்கியுள்ளது. அதேநேரம் எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில் அரசு, உதவி பெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு சென்னை, திருச்சி, சேலம், நீலகிரி, மதுரை ஆகிய இடங்களில் பாடம்வாரியாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பாடம் வாரியாக நான்கு சுற்றுகளாக ஆசிரியர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இப்பயிற்சி துவங்கியுள்ளது. பிற மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆசிரியர் பங்கேற்றனர். இதனால் தேர்வுப் பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியதாவது:
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர்கள் பலருக்கும் இப்பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நான்கு கட்டங்களாக பயிற்சி நடக்கிறது. மாணவர்கள் நலன் கருதி காலாண்டு தேர்வின் போது அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய நிலையில், இதுபோன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆசிரியர்களை அழைப்பது வினோதமாக உள்ளது.
இப்பயிற்சியை காலாண்டு தேர்வு முடிந்து, அக்டோபரில் நடத்தலாம். ஆசிரியைகள் நலன் கருதி பயிற்சி நடக்கும் இடங்களை மாவட்டம் வாரியாக தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்வி செயலாளர், இயக்குநர் ஆகியோரிடம் கடிதம் அளித்து வலியுறுத்தியுள்ளோம். பயிற்சியை தள்ளி வைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.