ஹிந்தி வழியில் தமிழ் கற்பிக்க செம்மொழி நிறுவனம் ஏற்பாடு
ஹிந்தி வழியில் தமிழ் கற்பிக்க செம்மொழி நிறுவனம் ஏற்பாடு
UPDATED : டிச 15, 2025 10:20 AM
ADDED : டிச 15, 2025 10:20 PM

சென்னை:
ஹிந்தி பேசுவோர் தமிழ் கற்கும் வகையில், ஹிந்தி மொழி வாயிலாக, தமிழ் சான்றிதழ் படிப்பை நடத்த, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் முன்வந்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், 41 செவ்வியல் நுால்களை ஆராய்வதை நோக்கமாக வைத்து இயங்குகிறது.
தமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழர் நாகரிகம், பண்பாடு போன்றவற்றை ஆய்வு செய்து வெளிப்படுத்துவது; பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்களை ஆராய்வது; செம்மொழி இலக்கியங்களை இணைய வழியில் கற்பிப்பது உள்ளிட்ட பணிகளை, இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில், திருக்குறள் உள்ளிட்ட செவ்விலக்கியங்களை, இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுகிறது.
தற்போது, தமிழ் மொழியை, பிற மொழிகளின் வாயிலாக கற்பிக்கும் திட்டத்தை துவக்கி உள்ளது. அதற்கான முன்னோட்டமாக, நம் நாட்டில் அதிக மக்கள் பேசி, எழுதும் மொழியான, ஹிந்தி மொழி வாயிலாக, அடிப்படை தமிழ் சான்றிதழ் படிப்பை கற்பிக்க உள்ளது.
அதாவது, மூன்று மாதங்களில், தமிழ், எழுத, படிக்க, பேச வைக்கும் வகையில், தினமும், 30 நிமிடங்களுக்கான, 90 வீடியோக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில், தமிழ் எழுத்துக்களை எழுதுவது, எழுத்துக்கூட்டி வாசிப்பது, சொற்களை வைத்து, வாக்கியங்களை அமைப்பது உள்ளிட்டவை, ஹிந்தி மொழி வாயிலாக விளக்கப்பட்டுள்ளன.
இந்த படிப்பில் சேருவோர் மட்டும், தங்களின் உள்ளீட்டு எண்ணுடன் நுழைந்து, 'ஆன்லைன்' வாயிலாக பாடங்களை கற்க முடியும். ஒவ்வொரு, 'வீடியோ' முடிந்ததும், எளிதான ஐந்து வினாக்களுக்கு, விடை அளிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு விடை அளித்தால் தான், அடுத்த வீடியோவை தொடர முடியும்.
இந்த, 90 வீடியோக்களையும் முடித்ததும், அனைத்து பாடங்களில் இருந்தும் எளிமையான தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றால், 'ஆன்லைன்' சான்றிதழ் வழங்கப்படும். இந்த படிப்பிற்கு, வீடியோக்களுடன் விரிவான புத்தகங்களும் வழங்கப்படும். மிகக்குறைந்த கட்டணத்தில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

