UPDATED : பிப் 05, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 09:20 AM
சென்னை அமெரிக்க துணை துாதரகத்தின் மண்டல பாதுகாப்பு அதிகாரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:
கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமல் ஷாஜி என்பவர் அமெரிக்கா செல்ல, எப் - 1 மாணவர் விசா கேட்டு விண்ணப்பித்தார். அவர் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்தோம். அப்போது, சென்னை பல்கலையில், பி.சி.ஏ., படித்து இருப்பதாக தாக்கல் செய்த சான்றிதழ் போலி என தெரிய வந்தது.அவரிடம் விசாரித்தபோது, கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் செய்படும் ஆர்.ஐ.எஸ்.எஸ்., ராயல் அகாடமியில் போலி சான்றிதழ் பெற்றதாக தெரிவித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கேரள மாநிலம், எர்ணாகுளம் சென்று, அதே பகுதியைச் சேர்ந்த ஷாகினா மோள், 36, என்பவரை பிடித்து விசாரித்தனர். குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்; கைது செய்யப்பட்டார்.மேலும், போலி சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் உள்ளிட்ட கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.ஷாகினா மோள் அளித்துள்ள வாக்குமூலம்:
நான் எம்.பி.ஏ., படித்துள்ளேன். குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என, முடிவு செய்தேன். அதற்காக, எர்ணாகுளம் பகுதியில், ஆர்.ஐ.எஸ்.எஸ்., ராயல் அகாடமியை துவங்கினேன்.இதன் வாயிலாக, சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, கேரள மாநிலம், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலை, கேரளா மற்றும் தமிழக அரசு பள்ளிகள் மற்றும் பல கல்வி நிறுவனங்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை போலியாக தயாரித்து விற்று வந்தேன். என்னிடம் விலைக்கு ஏற்ப போலி சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் கிடைக்கும்.சாதாரண பள்ளி, கல்லுாரி சான்றிதழ்களுக்கு ஒரு விலை; பிரபலமான கல்லுாரி சான்றிதழ்களுக்கு ஒரு விலை என, நிர்ணயம் செய்துள்ளேன்.என் மீது சந்தேகம் எழுந்ததால், அகாடமியின் பெயரையும் மாற்றி, போலி ஆவணங்கள் தயாரிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தேன். அமல் ஷாஜியிடம், சென்னை பல்கலை போலி சான்றிதழ் தயாரித்து கொடுக்க, 60,000 ரூபாய் வாங்கினேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

