அலோபதியைப் போல பிரிக்கப்படாத சித்த மருத்துவ கல்வி மற்றும் சேவை
அலோபதியைப் போல பிரிக்கப்படாத சித்த மருத்துவ கல்வி மற்றும் சேவை
UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : டிச 31, 2023 08:13 PM
மதுரை:
அலோபதி மருத்துவத்துறையைப் போல மருத்துவக்கல்வி, மருத்துவசேவை என இந்திய மருத்துவ இயக்குனகரத்தில் பிரிக்கப்படாததால் சித்தா டாக்டர்களின் பதவி உயர்வு கனவாகவே முடிகிறது.அலோபதியைப் பொறுத்தவரை மருத்துவக் கல்லுாரி, நர்சிங், பார்மசிஸ்ட் கல்லுாரிகள் அனைத்தும் மருத்துவக் கல்வி இயக்குநரின் கீழும், மருத்துவமனைகள் அனைத்தும் மருத்துவ சேவை இயக்குநரின் கீழ் தனித்தனியாக செயல்படுகிறது.இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனகரத்தின் கீழ் தமிழகத்தில் 2 அரசு சித்தா கல்லுாரிகள், 12 தனியார் கல்லுாரிகளும் 1000க்கும் மேற்பட்ட சித்தா மருத்துவ பிரிவுகளும் செயல்படுகின்றன. இவை அனைத்துக்கும் கமிஷனர் அந்தஸ்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் இணை இயக்குநர் அல்லது கண்காணிப்பாளர் அந்தஸ்தில் சித்தா டாக்டர்கள் உள்ளனர். மாநிலம் முழுமைக்கும் இணை இயக்குநர் ஒருவரே உள்ளார்.துறையில் எம்.டி., முடித்தவர்கள் கல்லுாரி வழியாக பதவி உயர்வு பெற்று இணை இயக்குநர்களாகின்றனர். மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் 25 ஆண்டுகள் பணியாற்றினாலும் மாவட்ட உதவி சித்த மருத்துவ அலுவலராக மட்டுமே பதவி உயர்வு பெறுகின்றனர். அதற்கு அடுத்த நிலையில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராவது குறைவு தான். அலோபதியில் எம்.பி.பி.எஸ்., படித்தவர்கள் அரசு மருத்துவனையில் பணியில் சேர்ந்தால் இணை இயக்குநர் வரை பதவி உயர்வு பெறுகின்றனர்.டாக்டர்களுக்கும் பற்றாக்குறை
1984 மக்கள் தொகை கணக்கெடுப்பில் அலோபதி டாக்டர்கள், சித்தா டாக்டர்களுக்கான விகிதப்படி நியமிக்கப்பட்டனர். தற்போது வரை அந்த விகிதாச்சாரத்தை சித்தா டாக்டர்களுக்கு மாற்றவில்லை. பணி ஓய்வு பெறுபவர்களின் காலிப்பணியிடம் மட்டுமே அவ்வப்போது நிரப்பப்படுகிறது. ஏற்கனவே உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர், பார்மசிஸ்ட், தெரபிஸ்ட் மூவரும் இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் மூன்று பணியிடத்திற்கான ஆட்கள் நியமிக்கப்படவில்லை. 20 சதவீத டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் ஒரு டாக்டர் 2 முதல் 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று வரவேண்டியுள்ளது.மருத்துவமனையும் தேவை
தமிழகத்தில் மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கோவை உட்பட 7 தவிர மீதியுள்ள மாநகராட்சிகளில் அதன் எல்லைக்குள் சித்த மருத்துவமனை இல்லை. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள் 18 பேர் தான் உள்ளனர். ஒவ்வொருவரும் 2 முதல் 4 மாவட்டங்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் சென்று வர அரசு வாகனம் இதுவரை வழங்கப்படவில்லை.துறையில் மாற்றம் தேவை
சித்தா டாக்டர்களுக்கான காலிப்பணியிடத்தை முழுமையாக நிரப்பவேண்டும். மாவட்ட உதவி சித்த மருத்துவ அலுவலர் பதவி உயர்வுக்கான கால வரம்பை குறைக்க வேண்டும். அலோபதியில் இருப்பதைப் போல சித்த மருத்துவப் படிப்புக்கு தனியாகவும் மருத்துவ சேவைக்கு தனியாகவும் சித்தா டாக்டர்களையே இயக்குநர்களாக நியமிக்க வேண்டும். அவர்களுக்கு மேல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்தால் மருத்துவ சேவையிலும் மருத்துவப் படிப்பிலும் உள்ள பிரச்னைகள் அடையாளம் காணப்பட்டு சித்த மருத்துவத்தை அடுத்து நிலைக்கு மேம்படுத்த முடியும்.

