கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் உயர்வு; உயர்கல்வி அமைச்சர் தகவல்
கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் உயர்வு; உயர்கல்வி அமைச்சர் தகவல்
UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : டிச 31, 2023 08:08 PM
பெங்களூரு:
அரசு முதல்நிலை கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் 5,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஊதியம், ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்தார். பெங்களூரில் கவுரவ விரிவுரையாளர்களுடன், உயர்கல்வி துறை அமைச்சர் சுதாகர் நேற்று ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி:
தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் கவரவு விரிவுரையாளர்களுக்கான ஊதியம், தற்போது 26,000 ரூபாயில் இருந்து 31,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது பணியாற்றி வரும் 10,600 கவுரவ விரிவுரையாளர்கள் பயன் பெறுவர். இந்த உயர்வு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும். இதற்காக அரசுக்கு, ஆண்டுதோறும் 55 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும்.ஓய்வூதியம்
குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி, 60 வயதில் ஓய்வு பெறும்போது, ஆண்டுக்கு 50,000 ரூபாய் என கணக்கிட்டு, ஐந்து லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக, 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.முதல் நிலை கல்லுாரிகளின் கவுரவ விரிவுரையாளர்களை, கல்லுாரி முதல்வர்கள், நிரந்தர ஊழியர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும்; பாகுபாடு காட்டக்கூடாது. ஒவ்வொரு மாதமும், ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளது.ரூ.5 லட்சம் காப்பீடு
இவர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும். இதற்காக மாதந்தோறும் 400 ரூபாய் செலுத்த வேண்டும். மீதி பணத்தை அரசு செலுத்தும். இதற்காக 5 கோடி ரூபாய் செலவிடப்படும்.இவர்களின் பிரச்னைக்கு அரசு பதிலளித்து உள்ளது. நவ., 23ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்ப வேண்டும். அவர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால், மாணவர்கள் நலன் கருதி அரசு, மாற்று வழியை கண்டுபிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

