UPDATED : செப் 08, 2026 10:17 AM
ADDED : செப் 08, 2026 10:19 AM

சென்னை:
இஸ்ரோவின் பணிகள் அனைத்தும் தனியார் மயமாகின்றனவா என, ஊழியர் சங்கங்கள் எழுப்பிய கேள்விக்கு, 'அப்படி எந்த திட்டமும் இல்லை' என, இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக, இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை:
இஸ்ரோவை தனியார் மயமாக்கவோ அல்லது அதன் முக்கியத்துவத்தை குறைக்கவோ முயற்சி நடப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை. ஒருபோதும், இஸ்ரோ தனியார்மயமாகாது; அதன் முக்கியத்துவமும் எந்த வகையிலும் குறையாது. இஸ்ரோ, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல முதன்மை பணிகளை செய்ய வேண்டி உள்ளது.
இந்தியாவின் அதிநவீன விண்வெளி ஆராய்ச்சி, மனித விண்வெளி பயணம், தேசிய மற்றும் உத்திசார் பயன்பாடுகள் போன்றவற்றில், இஸ்ரோ தான் முதன்மை அமைப்பாக செயல்படும். அதே சமயம், விண்வெளி துறையில் தனியார் துறையை ஈடுபடுத்துவது, இஸ்ரோவின் பங்கை குறைப்பதற்காக அல்ல. ஏற்கனவே வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட மற்றும் முதிர்ச்சி அடைந்த விண்வெளி தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்வதையும், வணிக மயமாக்குவதையும், தனியார் துறை கவனித்துக் கொள்ளும்.
அப்போது தான், இஸ்ரோ விஞ்ஞானிகளும், இன்ஜினியர்களும், அடுத்த தலைமுறைக்கான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் சிக்கலான தேசிய திட்டங்களில், முழுமையாக கவனம் செலுத்த முடியும். இந்த மாற்றம், தேசிய விண்வெளி கட்டமைப்பை வலிமையாக்க அவசியம் தேவை. எதிர்காலம் சார்ந்த, அதிநவீன தொழில்நுட்பங்களில் இஸ்ரோ கவனம் செலுத்தும்.
முக்கியமாக அடுத்த, 10 ஆண்டுகளில், இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான, 'பாரதிய அந்தரிக்ஷ்' நிலையத்தை அமைக்கும். அடுத்த, 15 ஆண்டுகளுக்குள், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் வெற்றி பெறும். விரைவில், அடுத்த தலைமுறைக்கான மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை உருவாக்கும். முக்கியமாக, நாட்டின் பாதுகாப்பு, முக்கிய உள்கட்டமைப்பு, உத்தி சார்ந்த விண்வெளி அமைப்புகள் போன்றவை, தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'எதுவும் புதிதல்ல'
இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி:
நாட்டின் தற்போதைய தேவைப்படி, ஆண்டுக்கு, 50 ராக்கெட்டுகள் வேண்டும். அவற்றை, இஸ்ரோவால் மட்டும் பூர்த்தி செய்ய முடியாது. அதற்கு, தனியார், பொதுத்துறைகளின் ஒத்துழைப்பு வேண்டும். இஸ்ரோவில், 20,000 ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் கவலைகள் மற்றும் கேள்விகளுக்கு, உரிய முறையில் தீர்வு காணப்படும்.
சில குழுக்களின் கடிதத்துக்காக எழுத்துப்பூர்வ விளக்கம் பொருத்தமற்றது. ஒவ்வொரு, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் ஏவப்படும் போதும், அவற்றின் பட்ஜெட்டில், 80 சதவீதம், தொழில்துறையினரின் முதலீடு தான். அதனால், எதுவும் புதிதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
