கிரீன் கார்டு வாங்க நேர்காணலுக்கு சென்ற இந்திய வம்சாவளி பெண் கைது
கிரீன் கார்டு வாங்க நேர்காணலுக்கு சென்ற இந்திய வம்சாவளி பெண் கைது
UPDATED : டிச 17, 2025 09:43 PM
ADDED : டிச 17, 2025 09:45 PM
வாஷிங்டன்:
அமெரிக்காவில் 32 ஆண்டுகளாக வசித்துவரும் இந்திய வம்சாவளி பெண் கிரீன் கார்டு நேர்காணலுக்கு சென்றபோது கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் 2வது முறை அதிபர் ஆன பிறகு அங்கு வசிக்கும் வெளிநாட்டுக்காரர்களுக்கு விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு விதிமீறல்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவை சேர்ந்த 60 வயதான பப்ளி கவுர், 1994 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பப்ளி கவுர் குடும்பம் முதலில் லகுனா பீச் என்ற பகுதியில் வசித்தனர். பின்னர் அங்கிருந்து லாங் பீச்சிற்கு மாறிவிட்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.
பப்ளி கவுர், தனது கணவருடன் லாங்பீச், கலிபோர்னியாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரபலமான ஹோட்டலை நடத்தி வந்தனர்.அங்குள்ள இரண்டு மகள், மருமகனுக்கு அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு உரிமையான கிரீன்கார்டு உள்ளது. மற்றொரு மகள் சட்டவிரோதமாக குடியேறிய குழந்தைக்கான திட்டமான டிஏசிஏ திட்டதில் வசிக்கிறார்.
பப்ளி கவுர் கிரீன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தார்.கிரீன்கார்டு பெற இறுதி படியான பயோமெட்ரிக்ஸ் செயல்முறைக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். டிசம்பர் 1ம் தேதி குடிவுரவு சேவைத்துறை அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் அவரை அங்கிருந்த அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.
அவரது மகள் ஜோதி கூறியதாவது:
எனது தாயாரை கையில் விலங்கிட்டு, 20க்கும் மேற்பட்ட ஆண்களுடன் இருந்த வேனில் ஏற்றினர். ஆரம்பத்தில் அவரது இருப்பிடம் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.
அதை தொடர்ந்து பல மணிநேர குழப்பத்திற்குப் பிறகு, அவர் அடிலாண்டா குடியேற்ற அலுவலகத்தில் இருப்பது தெரியவந்தது. தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள காரணத்தை உள்நாட்டு பாதுகாப்புத்துறை இன்னும் வெளியிடவில்லை.
இவ்வாறு ஜோதி கூறினார்.

