பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு; ஆன்லைனில் நிகழ்வுகள் பதிவேற்றம்
பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு; ஆன்லைனில் நிகழ்வுகள் பதிவேற்றம்
UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM
ADDED : ஜூன் 13, 2024 10:39 AM

பொள்ளாச்சி :
அரசு பள்ளிகளில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுவதுடன் ஆவணத் தொகுப்பும் செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டு, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சுற்றுச்சூழல் மனித வளத்தை பாதுகாக்கும் வகையில் பேரணி நடத்துதல், மரக்கன்று நடுதல், பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துதல், மக்கும், மக்காத குப்பைகளுக்கான தொட்டிகள் வைத்தல் என, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதில், பிற அரசு துறைகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைக்கப்பட்டும் வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வரும், 14ம் தேதி, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குறிப்பாக, தினமும், பள்ளித் துாய்மை உறுதிமொழி ஏற்கப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், https/merilife.nic.in/ministry/signup என்ற இணையதளத்தில் பதிவும் செய்யப்படுகிறது. இதேபோல, அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களும் சிறப்பாக செயல்படுத்தும் பள்ளியின் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆவணத் தொகுப்பு செய்வர்.
அதன்பின், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வர். அதன்படி, ஏழு நாள் நிகழ்வுகளில், போட்டிகள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டி போன்றவற்றை தொகுத்து, வரும், 17ல், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவும் உள்ளது.
இப்பணிகளை மேற்கொள்ள, 50 மற்றும் 50ம் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், 100 மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அடங்கிய உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, தலா, 2,500 ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

