UPDATED : மே 07, 2025 12:00 AM
ADDED : மே 07, 2025 11:30 AM
ராசிபுரம்:
நாளை துவங்கும் கியூட் நுழைவு தேர்வுக்கு ஹால் டிக்கெட், தேர்வு அட்டவணை இன்னும் வெளியாகாததால், தேர்வு தள்ளிப்போகுமா என, மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்தியாவில் உள்ள, 46 மத்திய பல்கலைகள் உள்பட, மாநில பல்கலை, நிகர்நிலை, தனியார் பல்கலை என, மொத்தம், 250க்கும் மேற்பட்ட பல்கலைகளில், உயர்கல்வி படிக்க நுழைவு தேர்வான, காமன் யுனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட், கியூட் என்ற பெயரில், நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சிஸ் நடத்தி வருகிறது.
இந்த தேர்வு வாயிலாக, இளநிலையிலான கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர முடியும். இந்தியா முழுதும், 3 லட்சம் இடங்களுக்கு ஆண்டுதோறும், 13 லட்சம் முதல், 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர்.
இந்தாண்டு, 13 மொழிப்பாடங்கள், 23 துறை தொடர்பான பாடங்கள், ஒரு பொதுஅறிவு தேர்வு என, மொத்தம், 37 தேர்வுகள் மட்டுமே நடக்கின்றன. 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே தேர்வு நடக்கும் எனவும், மே, 8ல் தொடங்கி ஜூன் 1 வரை நடக்கும் என, என்.டி.ஏ., அறிவித்திருந்தது.
ஆனால், தேர்வுக்கு இன்னும் ஒருநாளே உள்ள நிலையில், தேர்வு அட்டவணை, ஹால்டிக்கெட் நேற்று வரை வெளியாகவில்லை. இதனால், தேர்வு தள்ளிப்போகுமா என, மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், தேர்வை தள்ளிவைப்பது குறித்து, என்.டி.ஏ., இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
கியூட் பயிற்சியாளர் கூறியதாவது:
கியூட் நுழைவுத்தேர்வு, தமிழகத்தில், 27 தேர்வு மையங்களில் நடக்க உள்ளது.
ஆன்லைனில் எழுதும் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதால், இதுவரை தேர்வுக்கான அட்டவணை, ஹால்டிக்கெட்டை வெளியிடவில்லை. இதனால், மே மூன்றாவது வாரத்தில், 12, 13 தேதிகளில் தேர்வு தள்ளி வைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் தேர்வு அட்டவணை வெளியானால் தான் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

