UPDATED : ஏப் 09, 2025 12:00 AM
ADDED : ஏப் 09, 2025 11:44 AM

மதுரை :
மதுரை அமெரிக்கன் கல்லுாரி முதல்வருக்கு எதிரான முறைகேடு புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை அமெரிக்கன் கல்லுாரி ஓய்வு பெற்ற இணை பேராசிரியர் பிரபாகர் வேதமாணிக்கம் தாக்கல் செய்த மனு:
அமெரிக்கன் கல்லுாரி அரசு உதவி பெறும் கல்லுாரி. இதன் முதல்வர் தவமணி வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். சட்டவிரோதமாக 2012 முதல் தற்போதுவரை முதல்வர் மற்றும் செயலர் பதவியில் தொடர்கிறார். லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களை நியமித்தார்.
கொடைக்கானலில் பண்ணை வீடு, ஓய்வு விடுதிகளை வாங்கியுள்ளார். ஆடம்பர பங்களாக்கள் அமைத்துள்ளார்.
வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு, தொழிலில் செய்த முதலீடுகளுக்கு அரசின் முன் அனுமதி, ஒப்புதல் பெறவில்லை. அவரது தனிப்பட்ட ஆதாயம், குடும்ப உறுப்பினர்களுக்காக அரசு பணம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு 2024 ல் புகார் அனுப்பினேன். விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.தனபால் விசாரித்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞர்:
ஆரம்பகட்ட விசாரணை நடந்து நிலுவையில் உள்ளது. தாமதமின்றி விரைவில் விசாரணை முடிவடையும்.
தவமணி தரப்பு வழக்கறிஞர்: தவமணி மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவர் விரைவான விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி:
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் தாமதம் இன்றி விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

