9ம் வகுப்பு பாடப்புத்தகம் 2 வாரத்தில் தயாராகி விடும்: என்.சி.இ.ஆர்.டி., தகவல்
9ம் வகுப்பு பாடப்புத்தகம் 2 வாரத்தில் தயாராகி விடும்: என்.சி.இ.ஆர்.டி., தகவல்
UPDATED : ஏப் 06, 2026 09:48 AM
ADDED : ஏப் 06, 2026 09:48 AM
சென்னை:
மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்தின்படி, என்.சி.இ.ஆர்.டி., புதிய பாடப்புத்தகங்களை வடிவமைத்து வருகிறது. இந்நிலையில், என்.சி.இ.ஆர்.டி., இயக்குநர் தினேஷ் சக்லானி, இணைய வழியில், கல்வியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
அவர் கூறியுள்ளதாவது:
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்பதாம் வகுப்புக்கான புதிய புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடக்கிறது. இந்த தாமதத்துக்கு பல காரணங்கள் உள்ளன.
முக்கியமாக பாடப்புத்தகங்கள் குறித்து, எந்த சர்ச்சையும் ஏற்படக் கூடாது என்பதற்காக, ஒன்பதாம் வகுப்புக்கான பாடத்திட்ட வரைவை உருவாக்கி, பொது மக்களின் கருத்துகளுக்காக இணையதளத்தில் பதிவேற்றினோம்.
அதன் அடிப்படையில், தற்போது பாடங்களை வடிவமைத்து, அச்சிட்டு வருகிறோம். அந்த பணிகளை, வரும் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதனால், இந்த இரண்டு வாரங்களில், மாணவர்களுக்கு இணைப்பு பாடங்களை நடத்தும் பணியில், ஆசிரியர்கள் ஈடுபடலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
