புத்தக வாசிப்பு இயக்கம் துவக்கம் அனைவரும் பங்கேற்கலாம்
புத்தக வாசிப்பு இயக்கம் துவக்கம் அனைவரும் பங்கேற்கலாம்
UPDATED : டிச 25, 2025 10:58 AM
ADDED : டிச 25, 2025 10:59 AM

திருப்பூர்:
மாவட்ட நிர்வாகம் சார்பில், பொது இடத்தில், அமைதியான சூழலில் புத்தகம் வாசிக்கும் 'திருப்பூர் ரீட்ஸ்' இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் மனிஷ் நாரணவரே , இதை துவக்கிவைத்தார். பொது இடத்தில், அமைதியான சூழலில் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் மாவட்ட நிர்வாகத்தின் இப்புதிய நடைமுறை, புத்தக ஆர்வலர் மத்தியில் வரவேற்பைப்பெற்றுள்ளது.
பொதுமக்கள், மாணவ, மாணவியர் உள்பட அனைவரும், மர நிழலில் அமர்ந்து புத்தகம் வாசிக்க ஏதுவாக, கலெக்டர் அலுவலக வளாக பகுதியில், மர நிழலில், புற்கள் அகற்றப்பட்டு, சரி செய்யப்பட்டுள்ளது.
பொது இடத்தில், அமைதியான சூழலில் புத்தகம் வாசிப்பை விரும்புவோரை இணைப்பதற்காக, tiruppur.reads என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கமும் துவக்கப்பட்டுள்ளது. புத்தக விரும்பிகள் ஆர்வமுடன் அந்த பக்கத்தில் தங்களை இணைத்துவருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று, முதல் நாளிலேயே, பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆண், பெண், மாணவ, மாணவியர் ஏராளமானோர், புத்தகங்களுடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடினர்; மர நிழலில் அமர்ந்து, புத்தகம் வாசித்தனர்.
தரை விரிப்பில், பொதுமக்களுடன் அமர்ந்த கலெக்டர், இரண்டு மணி நேரம் வரை புத்தகம் வாசித்தார்; கையில் பேனா வைத்துக்கொண்டு, புத்தகத்தில் முக்கியமான விஷயங்களை, குறிப்பெடுத்தார்.
''இதற்கு நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது; முன்பதிவு தேவையில்லை. ஆர்வமுள்ளவர்கள், ஒரு விரிப்பு மற்றும் தங்களுக்கு பிடித்த புத்தகத்துடன், வந்தால் போதும்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில், வாரந்தோறும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், காலை, 9:00 மணி முதல் 11:00 மணி வரை, இந்த வாசிப்பு இயக்கம் நடைபெறும். பொதுமக்கள், தேர்வு எழுதுவோர், மாணவ, மாணவியர் என அனைவரும் இந்த இயக்கத்தில் பங்கேற்கலாம்'' என்றார் கலெக்டர்.
அனைவரும் வாருங்கள் திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே கூறியதாவது:
சிறந்த புத்தகங்களை தேடிப் பிடித்து, படிக்கவேண்டும். புத்தக வாசிப்பு, அறிவை வளர்ப்பதோடு, மனிதனை செதுக்குகின்றன. திருப்பூரில், மாணவ, மாணவியர், பொதுமக்கள் அனைவரின் மத்தியிலும், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் வாசிப்பதை ஒரு வழக்கமான நிகழ்வாக மாற்றுவதே இதன் நோக்கம். இது ஒரு புத்தக விவாதக்குழு அல்ல; அனைவரும் ஒன்று கூடி, அவரவர் புத்தகங்களை அமைதியாக வாசிக்கும் ஒரு நல்ல தளம்.
புதிய தலைமுறையினர் மத்தியில் வாசிப்பு ஆர்வத்தை துாண்டவும், தொடர்ந்து புத்தகத்தில் கவனம் செலுத்தி படிக்கவும் நடத்தப்படும், இந்த பொது வாசிப்பு இயக்கத்தில் அனைவரும் தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தார்.

