UPDATED : டிச 19, 2025 07:45 AM
ADDED : டிச 19, 2025 07:47 AM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது.
தமிழகத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் வகையில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம், கடந்த, 2022 - 23ம் கல்வியாண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டு எழுதப்படிக்க தெரியாதோர் அனைவரையும் முழுமையாக கண்டறிந்து, அவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு கல்வி கற்கும் வாய்ப்பை வழங்கும் வகையில், திட்ட செயல்பாடுகள் இரண்டு கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, முதற்கட்டத்தில் கண்டறியப்பட்ட, 5,37,876 பயனாளிகளுக்கு கடந்த, ஜூன் மாதம் அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடத்தப்பட்டு, எழுத்தறிவு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக கண்டறியப்பட்ட, 9,63,171 பயனாளிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள, 37,075 கற்போர் எழுத்தறிவு மையங்களில் இணைந்து தன்னார்வலர்களின் உதவியுடன், 200 மணி நேர கற்பித்தல், கற்றல் செயல்பாடுகள் கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்ட, 9.63 லட்சம் கற்போருக்கு நேற்றுமுன்தினம் அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடத்தப்பட்டது.
அதன்படி, பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். தன்னார்வலராக பிரீதா செயல்பட்டார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில், தொப்பம்பட்டி கிராமத்தில் வசிக்கும் வயது முதிர்ந்த பொதுமக்களில் எழுதவும், படிக்கவும் தெரியாத நபர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
உடுமலை புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், அடிப்படை எழுத்தறிவு தேர்வு மேற்கு குமரலிங்கம் பள்ளியில் நடந்தது.
இத்திட்டத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கான எழுத்தறிவு தேர்வு மேற்கு குமரலிங்கம், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் அருள்ஜோதி தேர்வின் போது ஆய்வு செய்தார்.
தலைமையாசிரியர் மனோன்மணி, ஆசிரியர்கள் கனகராஜ், ஞானாம்பிகை, தன்னார்வலர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மொத்தம், 65 பேர் இத்தேர்வை எழுதினர்.

