'அன்புக்கரங்கள்' திட்ட விண்ணப்பம்: முழுமையாக சரிபார்க்க உத்தரவு
'அன்புக்கரங்கள்' திட்ட விண்ணப்பம்: முழுமையாக சரிபார்க்க உத்தரவு
UPDATED : அக் 28, 2025 08:37 AM
ADDED : அக் 28, 2025 08:39 AM

திருப்பூர்:
'அன்புக்கரங்கள்' திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரரை பரிந்துரைக்கும் முன், அவர்களின் சுயவிபரங்களை முழுமையாக சரிபார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து, மற்றவரால் பராமரிக்க முடியாத குழந்தைகளுக்கு நிதியுதவி அளிக்க, 'அன்புக்கரங்கள்' திட்டம் தமிழக அரசால் துவக்கப்பட்டது.
பதினெட்டு வயது வரை மாதம், 2,000 ரூபாய் வழங்கும் இத்திட்டத்துக்கு தகுதியானவர்கள், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
விண்ணப்பித்தவர் விபரங்களை சரிபார்க்க, இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி கள ஆய்வு பணியாளர்கள் கூறியதாவது:
மத்திய - மாநில அரசுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ், 18 வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியர் நிதியுதவி பெறுகின்றனர்.
அவர்களுக்கே மீண்டும் உதவித்தொகை சென்று சேரக்கூடாது; அதே நேரம், தகுதியான பயனாளியாக ஒருவர் இருந்து, அவருக்கு நிதி உதவி சென்று சேராமல் விடுபட்டு விடக்கூடாது என்பதால், அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் ஒருவரை இணைத்து பரிந்துரைக்கும் முன், சுயவிபரங் களை முழுமையாக சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின், 'மிஷன் வாத்சல்யா' திட்டத்தின் கீழ், நிதி ஆதரவு தொகை பெறுபவர், பி.எம்., கேர்ஸ் திட்டத்தின் கீழ் பராமரிப்பு பெறுபவர், குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனங்களில் தங்கி படிப்பவர்கள், கொரோனாவின் கீழ் பராமரிப்பு நிதி பெறுபவர் போன்றோரை அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கக்கூடாது.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள மொபைல் போன் செயலியில் விபரங்களை பதிவேற்றும் போது, தவறான தகவல்களை பதிவேற்றக்கூடாது.
கூடுதல் கவனமுடன் கள ஆய்வு பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாதம் 4,000 ரூபாய்: 'மிஷன் வாத்சல்யா' திட்டம்
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது. தாய் அல்லது தந்தை இல்லாத அல்லது இருவரும் இல்லாத, 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் நிதி அல்லது பிற மருத்துவ கல்வி மேம்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவிகளை வழங்குவதே, இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
விதவை அல்லது விவாகரத்து செய்யப்பட்ட அல்லது கைவிடப்பட்ட தாயின் குழந்தைகள், உயிருக்கு ஆபத்தான அல்லது கடும் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும், 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது. விண்ணப்பிப்பது மற்றும் கூடுதல் விபரங்கள், http://wcd.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ளன.

