செங்கையில் பிளஸ் 2 தமிழ் தேர்வில் 284 பேர் ஆப்சென்ட்
செங்கையில் பிளஸ் 2 தமிழ் தேர்வில் 284 பேர் ஆப்சென்ட்
UPDATED : மார் 03, 2026 11:15 AM
ADDED : மார் 03, 2026 11:17 AM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், 29 ஆயிரத்து 097 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தமிழ் தேர்வில் 284 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
தமிழகம் முழுதும் பிளஸ் 2 தேர்வு நேற்று துவங்கியது. வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகள் 81, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் 21, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 135 என, மொத்தம் 237 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இதில்,91 தேர்வு மையங்கள் அமைக்கபட்டு உள்ளன. இந்த மையங்களில், பிளஸ் 2 வகுப்பில், 15,465 மாணவியர், 13,916 மாணவர்கள் என, மொத்தம் 29,381 மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று துவங்கிய தமிழ் தேர்வில் 15,294 மாணவியர், 13, 803 மாணவர்கள் என மொத்தம் 29,097 மாணவர்கள் தேர்வு எழுதினர். 171 மாணவியர், 113 மாணவர்கள் என, 284 மாணவர்கள், தேர்வு எழுத வரவில்லை.
செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் மாலதி ஹெலன் ஆய்வு செய்தார். முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி, முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் உதயகுமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ் பாடம் நேற்று தேர்வு எழுதினேன். பெரும்பாலான 1 மார்க் கேள்விகள் சுலபமாக இருந்தன. செய்யுள், உரைநடை பகுதியில் இருந்து கேட்கப்பட்ட 2, 4 மற்றும் 6 மார்க் கேள்விகள் எளிமையாக இருந்தன, தேர்வு எழுத போதிய நேரம் இருந்தது. நல்ல முறையில் தேர்வு எழுதினேன். அடுத்து வரும் தேர்வுகளையும் சிறந்த முறையில் எழுதுவேன் என நம்பிக்கை உள்ளது. - கே. ஜீவானந்தன். அரசு மேல்நிலைப் பள்ளி, வெண்ணாங்குப்பட்டு.
தாய் இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவி
மதுராந்தகம் அருகே முதுகரை அடுத்த வசந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ் மனைவி கற்பகம். இவர்களது மகள் மனுஸ்ரீ, 17. மதுராந்தகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். மனுஸ்ரீயின் தாய் கற்பகம், கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், நேற்று அதிகாலை இறந்தார்.
தாயின் இறப்பு செய்தி மாணவி மனுஸ்ரீக்கு தெரியவந்தது. இருப்பினும், நேற்று பிளஸ் 2 தமிழ் தேர்வு நடந்த நிலையில், மாணவிக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேர்வு எழுத அனுப்பினர். தாய் இறந்த சோகத்திலும் மனம் தளராமல் மன உறுதியுடன் தேர்வு எழுதினார். தேர்வு முடிந்து சக மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், மனுஸ்ரீயின் வீட்டுக்கு சென்று, அவரது தாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

