ஆக 22, 2025 12:00 AM
ஆக 22, 2025 12:00 AM

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களும், பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் நாட்டின் சிறந்த பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பெறும் நோக்கில் மத்திய அரசால் யாசஸ்வி உதவித்தொகை செயல்படுத்தப்பட்டுள்ளது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்:
பிற்படுத்தப்பட்ட பிரிவினர் - ஒ.பி.சி., பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் - இ.பி.சி., அறிவிக்கப்பட்ட பிரிவினர் - டி.என்.டி., ஆகியோர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உண்டு. ஒட்டுமொத்த குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பள்ளி கல்வி உதவித்தொகை 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் படிப்பவர்களுக்கும், உயர்கல்வி உதவித்தொகை ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., என்.எல்.யு., ஐ.ஆர்.எம்.ஏ., எப்.எம்.எஸ்., ஐ.ஐ.எப்.டி., எக்ஸ்.எல்.ஆர்.ஐ., உட்பட நாட்டின் பல்வேறு முன்னணி அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெறுபவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
உதவித்தொகை விபரம்:
பள்ளி கல்விக்கான உதவித்தொகை, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வழங்கப்படுகிறது. உயர்கல்விக்கான உதவித்தொகை, படிப்பு காலம் முழுவதும் வழங்கப்படுகிறது. மொத்த உதவித்தொகை எண்ணிக்கையில் குறைந்தது 30 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. 9ம் மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கட்டணம், விடுதி கட்டணம், இதர செலவீனம் உட்பட அதிகபட்சம் ரூ.75 ஆயிரமும், 11ம் மற்றும் 12ம் வகுப்பினருக்கு அதிகபட்சம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
நாட்டின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுபவர்களுக்கு முழு கல்விக்கட்டணமும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. எனினும், தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுபவர்களுக்கு அதிகபட்சம் 2 லட்சம் ரூபாயும், கமர்சியல் பைலட் படிப்புகளில் சேர்க்கை பெறுபவர்களுக்கு மட்டும் அதிகபட்சமாக 3 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. விடுதி மற்றும் உணவு செலவினங்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம், புத்தகங்களுக்காக ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம், கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் செலவினங்களுக்கு ஒரு முறை மட்டும் ரூ.45 ஆயிரம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
https://scholarships.gov.in/ApplicationForm/login எனும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
https://scholarships.gov.in/All-Scholarships