ஆக 13, 2025 12:00 AM
ஆக 13, 2025 12:00 AM

அனைத்து இன்ஜினியரிங் துறைகளுக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளதால், இன்று பெரும்பாலான மாணவர்களின் விருப்பமான தேர்வாக இன்ஜினியரிங் படிப்புகள் விளங்குகின்றன. பல்வேறு துறைகளில் ஆட்டோமேஷன் அதிகரித்து வருவதால், இன்ஜினியரிங் சாராத துறைகளிலும் கூட, இன்று டேட்டா சயின்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
ஏ.ஐ., மற்றும் டேட்டா சயின்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு மட்டுமின்றி, மெக்கானிக்கல், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என அனைத்து இன்ஜினியரிங் துறை சார்ந்த படிப்புகளுக்கும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இன்ஜினியரிங்கின் எந்த துறை சாந்த மாணவர்களாக இருந்தாலும், 'கோடிங்' திறனை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். தொழில்துறைகளுக்கு தேவையான திறன்களை வளர்க்கும் கல்லூரிகளை தேர்வு செய்வது நல்லது.
கல்லூரியின் முதலாமாண்டில் அடிப்படை பாடத்திட்டங்களை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். வேலைக்கு சேர்ந்த நாள் முதலே சிறப்பாக பணிபுரியும் நபர்களையே தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் சூழலில், செயல்முறை சார்ந்த கல்வியும், 'புராஜெக்ட்' சார்ந்த பாடத்திட்டமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய 'புராடெக்ட்' கண்டறியும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் மிக எளிதாகிறது. தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் மிக முக்கிய திறன்களில் கம்யூனிகேஷன் திறன், தொழில்நுட்ப திறன் மற்றும் ஆட்டிடியூட் ஆகிய மூன்றும் பிரதானமாக உள்ளன.
வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் நேர மேலாண்மை மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டே எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். சிறந்த வேலை வாய்ப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழில்முனைவு ஆகியவற்றில் விருப்பமானவற்றை முடிவு செய்து அதற்கேட்ப செயல்பட வேண்டும்.
'ஹேக்கத்தான்'களில் அதிகளவில் பங்கேற்கும்போது தான் தொழில்நுட்ப திறன் மேம்படும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அதேபோல், கோர் இன்ஜினியரிங் நிறுவனங்களிலேயே வேலைபெறவும் இன்று சாப்ட்வேர் அறிவு தேவைப்படுகிறது. 'கோடிங்' திறன் மட்டுமின்றி, துறை சார்ந்த திறன்களும் அவசியம். ஜாப்பானிஷ், ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்கும் மாணவர்களுக்கு வெளிநாடுகளிலும், முன்னணி தொழில் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் பிரகாசமாகின்றன.
-டாக்டர் சுதா மோகன் ராம், முதல்வர் மற்றும் இணை நிர்வாக அறங்காவலர், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி, கோவை