ஏப் 29, 2026 10:06 AM
ஏப் 29, 2026 10:06 AM

மருத்துவம் முதல் கல்வி வரை அனைத்து துறைகளிலும் மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக ஏ.ஐ., உருவெடுத்து வருகிறது. இந்த மாற்றம் சில வேலைகளின் தன்மையில் அதிகம் நிகழும் அதேசமயம், புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
அதாவது, ஏ.ஐ., பல பாரம்பரிய பணிகளை மாற்றி அமைக்கும். குறிப்பாக கீழ்நிலை மற்றும் ஒரே மாதிரியான பணிகளில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் புதிய தொழில்வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. இதனால், இன்றைய இளைஞர்கள் ஒரே துறையில் மட்டும் நின்று விடாமல், பல்துறை திறன்களை கற்றுக்கொள்வது முக்கியமாகிறது.
திறன்கள் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவதில்லை என்பது இன்றைய உண்மை. மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிய திறன்களை கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அது அவர்களின் முக்கியத் துறையுடன் தொடர்புடையாதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
பட்டப்படிப்புக்கு பிறகும், வாழ்க்கை முழுவதும் கற்றல் தொடர வேண்டும். மேலாண்மை திறன்கள், ஏ.ஐ., கருவிகள், தொழில்நுட்ப அடிப்படைகள், வடிவமைப்பு சிந்தனை போன்றவற்றை தொடர்ந்து மேம்படுத்துவது காலத்தின் தேவை.
மருத்துவத் துறையிலும் 'ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' அதிகளவில் பயன்படுத்தப்படும் சூழலில், மருத்துவர்களின் செயல்திறன் வெகுவாக அதிகரிக்கிறது. ரேடியாலஜி போன்ற துறைகளில் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகள் தானியக்கமாக்கப்படுவதால், மருத்துவர்களின் பணிச்சுமை குறைகிறது. மருத்துவர்களின் அதிக கவனம் நோயாளிகளின் மீது செலுத்தப்பட வாய்ப்புள்ளதால், சிறந்த சிகிச்சைக்கு வழிவகுக்கிறது.
ஒரு மருத்துவர் தினசரி பரிசோதிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதோடு, சிகிச்சைக்கான செலவுகளும் கட்டுப்பாட்டுக்குள் வரும் சூழல் உருவாகி உள்ளதால், மருத்துவ சேவையின் தரமும், அணுகுமுறையும் மேம்படுகின்றன.
போட்டிகள் அதிகரித்துவரும் சூழலில், படிப்புக்குப் பிறகான தங்களது அடுத்த கட்டத் திட்டங்களை மாணவர்கள் தெளிவாக அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மாணவர்கள் தங்களின் ஆர்வம் மற்றும் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு எந்த ஒரு துறையையும் தேர்வு செய்ய வேண்டும். ஆர்வமின்றி தேர்ந்தெடுக்கப்படும் துறை நீண்ட கால வெற்றியை உறுதி செய்யாது.
மாற்ற வேகமாக நிகழ்லும் இந்த சூழலில், 'எப்படி கற்றுக்கொள்வது' என்பதை கற்றுக்கொள்வதே மிக முக்கியமான திறனாகிறது. தொடர்ச்சியான கற்றலும், தன்னை மாற்றிக் கொள்ளும் திறனும் உள்ள மாணவர்களே எதிர்கால உலகில் முன்னிலை வகிப்பார்கள்.
-டாக்டர் அருண் என்.பழனிசாமி, அறங்காவலர், டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை, கோவை.
