/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
மின்னணு கனவுகளை மெய்ப்பிக்கும் இ.சி.இ., படிப்பு
/
மின்னணு கனவுகளை மெய்ப்பிக்கும் இ.சி.இ., படிப்பு
செப் 17, 2025 12:00 AM
செப் 17, 2025 12:00 AM

மின்னணு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை வடிவமைக்கவும், மேம்படுத்தவும் மாணவர்களுக்கு திறனை வழங்கும் படிப்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்.
இளநிலை பட்டப்படிப்பு
இத்துறையில் வழங்கப்படும் நான்கு ஆண்டு பி.இ., / பி.டெக், படிப்பில், மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு, ஒலி-ஒளி பரிமாற்றம், எம்பெடெட் சிஸ்டம்ஸ், வி.எல்.எஸ்.ஐ., ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முக்கியமான தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்படுகின்றன.
தகுதி
இப்படிப்பில் சேர 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றை முக்கிய பாடங்களாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., போன்ற தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற ஜே.இ.இ., எழுத வேண்டும். தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற, 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் டி.என்.இ.ஏ., கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். மேலும், ஏராளமான பல்கலைக்கழகங்கள் பிரத்யேக நுழைவுத் தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
வேலை வாய்ப்புகள்
கோர் மின்னணுவியல், தொலைத்தொடர்பு, எம்பெடட் அமைப்புகள், மென்பொருள் மேம்பாடு, ஆட்டோமேஷன் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இஸ்ரோ, பெல், டி.ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
முதுநிலை பட்டப்படிப்பு
எம்.இ., / எம்.டெக்., இரண்டு ஆண்டு படிப்பில், இ.சி.இ., துறையின் ஆழமான அம்சங்கள் கற்பிக்கப்படுகின்றன. வி.எல்.எஸ்.ஐ., வயர்லெஸ் தொடர்பு, சிக்னல் செயலாக்கம், நானோ மின்னணுவியல், ரோபாட்டிக்ஸ் ஆகிய தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்படுகின்றன.
தகுதி
பி.இ., / பி.டெக்.,- இ.சி.இ., அல்லது சமமான துறையில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். கேட், டான்செட் மற்றும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் வாயிலாக சேர்க்கை பெறலாம்.
வேலை வாய்ப்பு
ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர்நிலை பொறியியலாளர் உட்பட பல்வேறு பணி வாய்ப்புகள் உள்ளன. பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் வாய்ப்பும் பிரகாசம்.

