ஆக 27, 2025 12:00 AM
ஆக 27, 2025 12:00 AM

உயர்கல்வியை பொருத்தவரை, பெரும்பாலான இந்திய மாணவ, மாணவிகளின் பிரதான தேர்வு மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங். இவற்றில், உன்னதமான மருத்துவப் படிப்பை தேர்வு செய்யும் முன், சில அவசியமான அடிப்படை அம்சங்களை அறிந்து கொள்வது நல்லது.
ஒரு முழுமையான டாக்டர் ஆக சமூகத்தில் பிரகாசிக்க, பள்ளி படிப்பிற்கு பிறகு, 10 ஆண்டுகள் மருத்துவ படிப்பிற்கும், பயிற்சிக்கும் செலவிடும் அளவிற்கு அனைத்து விதத்திலும் தயாராக இருத்தல் வேண்டும். மருத்துவத்துறையில் கற்றுக்கொள்ள ஏராளமான பாடங்களும், தகவல்களும் இருப்பதால், தொடர்ந்து கற்று அறிவை மேம்படுத்தும் மனப்பக்குவம் அவசியம். அதோடு, பெற்ற அறிவு மற்றும் தகவல்களை சரியான முறையில் பயன்படுத்தும் திறனும் முக்கியம்.
மேலும், நீண்ட நேரம் பணிபுரியும் ஆற்றல், ஆரோக்கியம், பல்வேறு சவால்களை திறம்பட கையாளும் பக்குவம் ஆகியவையும் அவசியம். நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் திறம்பட தொடர்பு கொள்ளும் திறனும் இன்று மிகவும் அவசியமாகிறது. இவைகளோடு, எந்த சூழலிலும் தடுமாறாத பொறுமையும், கணிவும் ஒரு டாக்டருக்கு தேவை என்பதையும் மறந்துவிட வேண்டாம். இவை குறித்த ஆழமான புரிதலுடன் எம்.பி.பி.எஸ்., சேரும் மாணவ, மாணவிகள் நிச்சயம் எதிர்காலத்தில் ஒரு சாதனை மிகு டாக்டர்களாக ஜொலிப்பர்.
வெளிநாடுகளில் உள்ளது போன்று, ஒரு துறை சார்ந்த படிப்பை படித்துக்கொண்டிருக்கும் போதே பிற துறை சார்ந்த பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கும் நெகிழ்வுத்தன்மை நம் நாட்டில் இன்னும் பரவலாக வரவில்லை. மேலும், மருத்துவம் படிக்க ஆர்வம் காட்டும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், 'ஸ்பெசாலிட்டி' மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் இந்தியாவில் தேவைக்கும் குறைவாக இருப்பதும் தான், சிலர் வெளிநாடுகளை நாட காரணமாக அமைகிறது. ஆனால், கல்வி தரத்திலும், உள்கட்டமைப்பு வசதிகளிலும், நவீன தொழில்நுட்ப பயன்பாட்டிலும் நம் நாடு சிறந்து விளங்குகிறது.
நாடு முழுதும் மருத்துவ மற்றும் சுகாதார நிலையங்களில் ஏ.ஐ., முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, லட்சக்கணக்கான தரவுகளை பராமரிக்கவும், நோயாளிகளின் தகவல்களை ஆராய்ந்து, அறிக்கை அளிப்பதிலும் ஏ.ஐ.,யின் பயன்பாடு அளப்பரியது. எங்கள் கல்வி நிறுவனத்திலும் மாணவ, மாணவிகளுக்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கும் வகையில், பாடத்திட்டத்துடனும், ஆய்வகத்துடனும் ஏ.ஐ.,யை ஒருங்கிணைத்துள்ளோம்.
நவீன தொழில்நுட்பங்கள் மருத்துவ துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். ரோபாட்டிக்ஸ் போல ஏ.ஐ.,யும் மருத்துவ துறையில் செயல்திறனை மேம்படுத்த பயன்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எந்த ஒரு தொழில்நுட்பமும் டாக்டருக்கு மாற்றாக அமையாது!
- டாக்டர். ரேகா, டீன், டாக்டர். டி.ஒய். பாட்டீல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், பிம்ப்ரி, புனே
info.medical@dpu.edu.in