ஆந்திராவில் கள்ள ஓட்டுப்போட வந்த இளைஞர்களை வெளுத்த சி.ஆர்.பி.எப் வீரர்கள்: வீடியோ வைரல்
ஆந்திராவில் கள்ள ஓட்டுப்போட வந்த இளைஞர்களை வெளுத்த சி.ஆர்.பி.எப் வீரர்கள்: வீடியோ வைரல்
ADDED : மே 14, 2024 11:16 AM

திருப்பதி: ஆந்திராவில் கள்ள ஓட்டுப்போட வந்த இரு இளைஞர்களை சிஆர்பிஎப் வீரர்கள் பிடித்து நடுரோட்டில் மண்டியிட வைத்து தடியால் அடித்து வெளுத்தனர். இதனையடுத்து கள்ள ஓட்டுப்போட வந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
ஏழு கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் 4 கட்டங்கள் நேற்றுடன் (மே 13) முடிவடைந்தன. நேற்று ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் சித்தூர், கடப்பா, அனந்தபூர் உட்பட பல இடங்களில் ஓட்டுச்சாவடியில், ஓய்.எஸ்.ஆர் மற்றும் தெலுங்கு தேச கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. தொண்டர்கள் ஓட்டுச்சாவடிக்கு நுழைந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ள ஓட்டு பதிவு செய்ய முயன்றதாக கூறி, இரு கட்சி தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர்.
அதேபோல், தெனாலி தொகுதியில் ஓட்டுச்சாவடி ஒன்றில் வரிசையில் வரச்சொன்ன வாக்காளரை ஆளும் ஒய்.எஸ்.ஆர்.,காங். கட்சி எம்.எல்.ஏ., சிவக்குமார் கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு வாக்காளரும் எம்எல்ஏ.,வை தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதியில் உள்ள தொட்டாபுரம் ஓட்டுச்சாவடியில் இரு இளைஞர்கள் வாக்காளர்கள் போல் வரிசையில் நின்றிருந்தனர்.
கள்ள ஓட்டு
அவர்களை பார்த்து சந்தேகமடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர்கள், இருவரையும் தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, நடுரோட்டில் மண்டியிட வைத்து கைகளை மேலே உயர்த்தச் சொல்லி தடியால் அடித்து வெளுத்தனர். அடி தாங்க முடியாமல், கள்ள ஓட்டு போட வந்ததை இளைஞர்கள் ஒப்புக்கொண்டனர். பிறகு, அவர்களை இதுபோன்ற குற்ச்சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.

