ADDED : ஏப் 29, 2026 01:40 AM

புதுடில்லி:டில்லி பா.ஜ., தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
டில்லி பா.ஜ., தலைவரான வீரேந்திர சச்தேவா மூன்றாண்டு கால பதவிக்காலம் மார்ச் மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மேற்கு வங்கம், கேரளம், தமிழகம், புதுச்சேரி, அசாம் மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், டில்லி பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து அறிவிக்கப்படவில்லை.
மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடக்கும் நிலையில், டில்லி பா.ஜ., நிர்வாகிகளிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
டில்லி சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மை தொகுதிகளை வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.
எனவே, வீரேந்திர சச்தேவாவுக்கு இரண்டாவது முறையாக தலைவர் பதவியில் தொடர வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
அதேநேரத்தில், புதுடில்லி முனிசிபல் கவுன்சில் துணைத் தலைவர் குல்ஜீத் சஹால், மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர், டில்லி பா.ஜ., தலைவர் பதவியை கைப்பற்ற மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
பா.ஜ., கட்சி விதிமுறைப்படி, மாநிலத் தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் எனவும், ஒருவர் அதிகபட்சமாக தொடர்ந்து இரண்டு முறை பதவி வகிக்கலாம்.
கடந்த, 2022ம் ஆண்டு டில்லி பா.ஜ., செயல் தலைவராக நியமிக்கப்பட்ட வீரேந்திர சச்தேவா, 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் தலைவராக பொறுப்பேற்றார்.
