டி.ஜி.பி., நியமனத்தில் தாமதம் ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
டி.ஜி.பி., நியமனத்தில் தாமதம் ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
ADDED : செப் 09, 2025 06:22 AM

'தமிழக டி.ஜி.பி., நியமனத்தில் அரசு தாமதமாக நடந்து கொண்டது ஏன்?' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதே சமயம், இந்த பதவிக்கான பரிந்துரை பட்டியலை விரைந்து பரிசீலித்து அனுப்பும்படி, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது .
தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் ஆக., 31ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டி.ஜி.பி.,யாக தமிழக போலீஸ் துறையின் நிர்வாகப் பிரிவு டி.ஜி.பி., வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார்.
அவமதிப்பு வழக்கு இந்நிலையில், புதிய டி.ஜி.பி., நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மீறப்பட்டிருப்பதாக கூறி, தமிழக அரசுக்கு எதிராக வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளருமான ஹென்றி திபேன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
மாநில டி.ஜி.பி.,க்கள் நியமனம் முற்றிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையில் நடக்க வேண்டும்.
இது தொடர்பாக உத்தர பிரதேச டி.ஜி.பி.,யாக இருந்த பிரகாஷ் சிங் மற்றும் அசாம் டி.ஜி.பி.,யாக இருந்த என்.கே.சிங் தொடர்ந்த வழக்கில், டி.ஜி.பி., நியமனத்திற்கான வழிகாட்டுதல்களை கடந்த 2018ல் உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
பணி அனுபவம், சேவை, தலைமைத்துவ திறன் அடிப்படையில் மட்டுமே டி.ஜி.பி.,க்கள் நியமனம் இருக்க வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
டி.ஜி.பி., பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே, அந்த பதவிக்கு பொருத்தமான சீனியாரிட்டி ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியலை மாநில அரசு தயாரித்து யு.பி.எஸ்.சி.,க்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
தவிர டி.ஜி.பி., பணி நியமனத்தில் எந்தவொரு அரசியல் தலையீடோ, பாரபட்சமோ இருக்கக் கூடாது. இதற்காக பொறுப்பு டி.ஜி.பி., நியமனங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என, 2018ல் வழங்கிய அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது .
ஆனால், தமிழக அரசு இந்த உத்தரவை மதிக்காமல், பொறுப்பு டி.ஜி.பி.,யை நியமித்துள்ளது. எனவே, தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமை யிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ''டி.ஜி.பி., நியமனம் தொடர்பாக மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெயர் பரிந்துரைகளை யு.பி.எஸ்.சி., அமைப்புக்கு அனுப்பிஉள்ளது,'' என்றார்.
முறையிட்டார் அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'டி.ஜி.பி., பதவிக்கான பெயர் பரிந்துரை பட்டியல் ஏன் தாமதமாக அனுப்பி வைக்கப்பட்டது?' என, கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ரோஹத்கி, ''டி.ஜி.பி., பதவிக்கு தன் பெயரையும் பரிந்துரைக்க வலியுறுத்தி, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் முறையிட்டார். அந்த மனு விசாரிக்கப்பட்டு, சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
''இதனால் தான், டி.ஜி.பி., பதவிக்கான பெயர் பரிந்துரை பட்டியல் யு.பி.எஸ்.சி.,க்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டது,'' என விளக்கம் அளித்தார்.
இதை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
யு.பி.எஸ்.சி., நிர்வாகத்திற்கு காலக்கெடு விதிக்க முடியாது. எனினும், புதிய டி.ஜி.பி., நியமனம் தொடர்பாக தமிழக அரசின் பட்டியலை விரைந்து பரிசீலித்து அனுப்பி வைக்க வேண்டும். அப் போது தான் மாநில அரசுகள் புதிய டி.ஜி.பி.,க்களை நியமிக்க முடியும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-டில்லி சிறப்பு நிருபர் -