பயிர் கழிவுகள் எரிப்பவர்களை ஏன் சிறையில் அடைப்பதில்லை: உச்ச நீதிமன்றம் கேள்வி
பயிர் கழிவுகள் எரிப்பவர்களை ஏன் சிறையில் அடைப்பதில்லை: உச்ச நீதிமன்றம் கேள்வி
UPDATED : செப் 18, 2025 10:15 AM
ADDED : செப் 17, 2025 11:53 PM

புதுடில்லி: வடமாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலையில், 'விதிமீறுபவர்கள் மீது ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படுவதில்லை' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 'ஒரு சிலரை பிடித்து சிறையில் அடைத்தால் தான், தவறு நிகழ்வது தடுக்கப்படும்' எனவும் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளது.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் அறுவடை முடிந்ததும் பயிர்க் கழிவுகளை விவசாயிகள் பலர் எரித்து வருகின்றனர். இதனால், தேசிய தலைநகரான டில்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் புகை மண்டலம் சூழ்ந்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. மூச்சுத் திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகிறது.
இதைத் தொடர்ந்து, பயிர்க் கழிவுகளை எரிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும், அந்த உத்தரவு இதுவரை முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, பயிர்க் கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் வடமாநிலங்களில் தொடர்கதையாக உள்ளன. இந்நிலையில், இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'சுற்றுச்சூழலை காக்க வேண்டுமெனில், அவ்வப்போது முறையிட்டு கொண்டே இருந்தால் போதாது. கடுமையான நடவடிக்கை அவசியம் எடுக்கப்பட வேண்டும்' என, தலைமை நீதிபதி கவாய் காட்டமாக கூறினார். இது குறித்து தலைமை நீதிபதி கூறியுள்ளதாவது: இந்த விவகாரத்தில் கடுமையான தண்டனை வழங்குவது பற்றி ஏன் சிந்திப்பதில்லை.
ஒரு சிலரையாவது பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். அப்போது தான் பயிர்க் கழிவுகளை எரிக்கக் கூடாது என்ற செய்தி அனைவருக்கும் சென்று சேரும். சுற்றுச்சூழலை உண்மையாகவே காக்க விரும்பினால், பயிர்க் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு நிச்சயம் அபராதமாவது விதிக்க வேண்டும். அதை ஏன் செய்வதில்லை.
வேளாண் கழிவுகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும். அதை எரிப்பதற்கு பதிலாக எரிபொருளாக மாற்ற முடியும். இது பற்றி நான் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அது குறித்து ஏன் கவனம் செலுத்துவதில்லை. இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.