தர்மஸ்தலா வழக்கில் சின்னையாவை டில்லியில் சந்தித்தது யார்?
தர்மஸ்தலா வழக்கில் சின்னையாவை டில்லியில் சந்தித்தது யார்?
ADDED : ஆக 24, 2025 11:55 PM

பெங்களூரு: தர்மஸ்தலாவில் இருந்து மண்டை ஓடுகளை டில்லிக்கு எடுத்து சென்றதாக, கைதான சின்னையா 'பகீர்' வாக்குமூலம் அளித்து உள்ளார்.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது.
இந்த வழக்கில் பொய் புகார் அளித்த மாண்டியாவின் சிக்கப்பள்ளி கிராமத்தின் சின்னையா, 53, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை 10 நாள் காவலில் எடுத்து, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
அவர் அளித்த வாக்குமூலம் குறித்து எஸ்.ஐ.டி., போலீசார் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்த சின்னையாவை, ஒரு கும்பல் தர்மஸ்தலாவுக்கு அழைத்து வந்து, போலியாரு வனப்பகுதியில் ஒரு மண்டை ஓடு, சில எலும்பு கூடுகளை புதைத்து உள்ளது.
இன்னொரு மண்டை ஓடு, எலும்புக் கூடுகளுடன் தர்மஸ்தலாவில் இருந்து டில்லிக்கு, சின்னையாவை காரிலேயே அழைத்து சென்று உள்ளது.
டில்லியில் ஒருவரை சந்தித்து உள்ளனர். அவர், சின்னையாவிடம் நீதிமன்றத்தில் எப்படி பேச வேண்டும்; போலீசார் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி கொடுத்து உள்ளார்.
பின், சின்னையாவை டில்லியில் இருந்து தர்மஸ்தலாவுக்கு அழைத்து வந்து புகார் அளிக்க வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுபோல தர்மஸ்தலா சென்று மகள் அனன்யா பட் காணாமல் போனதாக, பொய் புகார் அளித்த சுஜாதா பட்டையும், வரும் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர்.