என்னது, எலி காரணமா...? சாலை பள்ளத்துக்கு சரமாரி கதை விட்ட ஊழியர் டிஸ்மிஸ்
என்னது, எலி காரணமா...? சாலை பள்ளத்துக்கு சரமாரி கதை விட்ட ஊழியர் டிஸ்மிஸ்
ADDED : செப் 19, 2024 06:59 PM

புதுடில்லி : 'டில்லி - மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ்வேயில் ஏற்பட்ட பள்ளத்திற்கு எலி தான் காரணம்' என கதை விட்ட ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தலைநகர் டில்லி முதல் மகாராஷ்டிரா வரையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 1,386 கி.மீ., தூரம் கொண்ட இச்சாலை ஹரியானா, ராஜஸ்தான், ம.பி., குஜராத் மாநிலங்களில் உள்ள 24 நகரங்களை இணைக்கிறது. இதன் மூலம் டில்லியில் இருந்து மும்பைக்கு 12 முதல் 13 மணி நேரத்தில் சென்றடைய முடியும். ஜூலை 31 அன்றைய நிலவரப்படி இச்சாலை அமைக்கும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில், இச்சாலையில் பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டதுடன் அது புகைப்படங்கள் வெளியாகின. இது குறித்து, இச்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட நிறுவனத்தில் பணியாற்றிய இளநிலை அதிகாரி ஒருவர் கூறுகையில், '' எலிகள் அல்லது வேறு விலங்குகள் தான் அந்த பள்ளத்தை தோண்டின; இதனால் தான் நீர்கசிவு ஏற்பட்டது'', என தெரிவித்தார்.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அந்த ஊழியரை பணி நீக்கம் செய்து சம்பந்தப்பட்ட நிறுவனம் உத்தரவிட்டது. பள்ளம் ஏற்பட்ட பகுதியில் தடுப்புகள் அமைத்து விபத்து ஏற்படாத வகையில் பார்த்து கொண்டது.
மேலும் தண்ணீர் கசிவு காரணமாக தான் பள்ளம் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

