மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டோம்: நட்டா உறுதி
மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டோம்: நட்டா உறுதி
UPDATED : மே 27, 2024 04:34 PM
ADDED : மே 27, 2024 04:33 PM

லக்னோ: 'பிரதமர் மோடியும், பா.ஜ.,வும் இருக்கும் வரை மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டோம்' என பா.ஜ., நட்டா பேசினார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பா.ஜ., தலைவர் நட்டா இன்று (மே 27) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சி குறித்து சாமானியர்களிடையே பிரதமர் மோடி நம்பிக்கையை ஏற்படுத்தினார். முன்னதாக, ஆட்சியில் இருந்தவர்கள் ஜாதி மற்றும் மதம் அடிப்படையில் பிளவுகளை உருவாக்கினர். இப்போது வளர்ச்சியின் அடிப்படையில் அரசியல் நடக்கிறது.
அரசியலமைப்பு சட்டம்
தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை யாரும் ஆக்கிரமிக்க நாங்கள் விடமாட்டோம். ஜூன் 4ம் தேதி எதிர்க்கட்சிகளின் நிலைமை என்ன ஆகப் போகிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக உள்ளது. ஆனால், மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. பிரதமர் மோடியும், பா.ஜ.,வும் இருக்கும் வரை நடக்காது. இவ்வாறு நட்டா பேசினார்.

