தாலுகா ஊழியர் தற்கொலையா, கொலையா? டி.எஸ்.பி.,க்கு வந்த கடிதத்தால் பரபரப்பு!
தாலுகா ஊழியர் தற்கொலையா, கொலையா? டி.எஸ்.பி.,க்கு வந்த கடிதத்தால் பரபரப்பு!
ADDED : நவ 20, 2024 12:25 AM

பெலகாவி; 'பெலகாவி தாலுகா அலுவலக இரண்டாம் நிலை உதவியாளர் ருத்ரண்ணா யாதவண்ணா தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டு உள்ளார்' என டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு மர்ம கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பெலகாவி தாலுகா அலுவலகத்தில் இரண்டாம் நிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் ருத்ரண்ணா யாதவண்ணா, 33. இவர், சவதத்தி எல்லம்மா தாலகா அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதை ரத்து செய்யுமாறு மாவட்ட கலெக்டர், தாசில்தார், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரிடம் வலியுறுத்தினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், நவ., 5ம் தேதி தாலுகா அலுவலகத்தில் துாக்கில் பிணமாக தொங்கினார். இவ்விஷயம் மாநிலத்தில் பெரிதும் பேசப்பட்டது.
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. அதில், 'ருத்ரண்ணா யாதவண்ணா தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். தாசில்தாரின் வாகன ஓட்டுனர் எல்லப்பா படசப்பா தான் முக்கிய குற்றவாளி. தாசில்தாரின் ஜீப்பை சோதனை செய்தால், அனைத்து ஆதாரங்களும் கிடைத்துவிடும். எல்லப்பாவின் மனைவிக்கு கள்ளத்தொடர்பு உள்ளது. அவரிடம் விசாரித்தால், மர்மம் விலகும். ருத்ரண்ணாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தின் நகல், கவர்னர், மனித உரிமை கமிஷன் தலைவர், பெலகாவி நகர போலீஸ் கமிஷனர், மாவட்ட கலெக்டர், விசாரணை அதிகாரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
ருத்ரண்ணாவின் தாயார் எல்லவ்வா கூறுகையில், ''தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என் மகன் கோழை அல்ல. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமினில் உள்ளதால், எனக்கு பயமாக உள்ளது. போலீசார் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும். எனக்கும், என் மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது,'' என்றார்.
நகர போலீஸ் கமிஷனர் லடா மார்டீன் கூறுகையில், ''பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோர். சம்பவ தினத்தன்று, அங்கு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு கடிதம் வந்தது குறித்து எனக்கு தகவல் இல்லை. அது குறித்து விசாரிப்போம்,'' என்றார்.
***

