பீஹார் முதற்கட்ட சட்டசபை தேர்தலில் 64.66 % ஓட்டுப்பதிவு: 25 ஆண்டுகளில் அதிகம்
பீஹார் முதற்கட்ட சட்டசபை தேர்தலில் 64.66 % ஓட்டுப்பதிவு: 25 ஆண்டுகளில் அதிகம்
UPDATED : நவ 06, 2025 10:07 PM
ADDED : நவ 06, 2025 07:35 AM

பாட்னா: பீஹாரில், 121 சட்டசபை தொகுதிகளில் இன்று (நவ.,06) காலை 7 மணிக்கு முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இதில் 64.66 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு 62.57 % ஓட்டு பதிவான நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கூடுதல் ஓட்டு பதிவாகியுள்ளது.
பீஹாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ., எதிர்க்கட்சியான காங்., கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, புது போட்டியாளராக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
இந்த தேர்தலில், ஆளும் தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மஹாகட்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பீஹாரின் 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில், முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று (நவ.,06) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. சிறு சிறு பிரச்னைகளை தவிர்த்து தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 64.66 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
பீஹார் தேர்தல் வரலாற்றில்
2005 பிப்.,ல் நடந்த தேர்தலில் 46.5 %
2005 அக்.,ல் நடந்த தேர்தலில் 45.85%
2010 ல் 52.73%
2015 ல் 56.91%
2020 ல் 57.29 % சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் அதிகளவு ஓட்டு பதிவாகியுள்ளது.
7.24 கோடி வாக்காளர்கள்
மொத்தம், 45,341 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இவற்றில், 36,733 ஓட்டுச்சாவடிகள் கிராமப்புறங்களில் உள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முக்கிய வேட்பாளர்கள் யார்?
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், மஹாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் - ரகோபூர்; பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி - தாராபூர்; ஜனசக்தி ஜனதா தள தலைவரும், தேஜஸ்வியின் சகோதரருமான தேஜ் பிரதாப் - மஹுவா தொகுதியிலும் போட்டியிட்டனர்.

