மின்னணு பெட்டிகள் மூலம் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
மின்னணு பெட்டிகள் மூலம் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
ADDED : பிப் 20, 2024 06:48 AM

பெங்களூரு: ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், ஓட்டுச்சாவடிகளில் மின்னணுப் பெட்டிகளைக் கொண்டு தேர்தல் அதிகாரிகள் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் கால அட்டவணை, இம்மாத இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, ஏற்கனவே சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா பங்கேற்று வந்தார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஓட்டுப்பதிவு சதவீதத்தை உயர்த்துவதற்கு மாநில அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்பதை உறுதி செய்து கொள்ளும் வி.வி., பேட் இயந்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஓட்டுச்சாவடி வாரியாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மும்முரமாக நடக்கிறது.
சித்ரதுர்கா, கொப்பால், ஹுப்பள்ளி - தார்வாட், உத்தர கன்னடா, துமகூரு, ராய்ச்சூர், கதக் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
குறிப்பாக கிராமங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளிலும்; கடந்த தேர்தல்களில் குறைவான ஓட்டுப்பதிவு ஆன பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விரைவில், கல்லுாரிகள், மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

