தமிழகத்தில் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி
தமிழகத்தில் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி
ADDED : அக் 24, 2025 12:19 AM

நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை இரு கட்டங்களாக நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கும் மாநிலங்களில் நவம்பரில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பீஹாரைத் தொடர்ந்து, நாடு முழுதும் சிறப்பு தீவிர திருத்தப் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தலைமையில் டில்லியில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் துவங்கியது.
தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இரண்டு நாள் கூட்டத்திற்கு பின் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், அசாம், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் அடங்கும். இதற்கான பணிகள் அடுத்த மாதம் துவங்கப்படும். அடுத்த மூன்று மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

