மீண்டும் நவீன் பட்நாயக்குடன் வி.கே.பாண்டியன்: பரபரப்பானது ஒடிசா அரசியல்!
மீண்டும் நவீன் பட்நாயக்குடன் வி.கே.பாண்டியன்: பரபரப்பானது ஒடிசா அரசியல்!
ADDED : ஆக 25, 2025 12:27 PM

புவனேஸ்வர்: இடைவெளிக்கு பிறகு மீண்டும் நவீன் பட்நாயக்குடன் வி.கே.பாண்டியன் இணைந்திருப்பது, ஒடிசா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
வி.கே.பாண்டியன் தமிழகத்தை சேர்ந்தவர். முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அவர், 2023ல் விருப்ப ஓய்வுக்கு பின்னர் பி.ஜே.டி.,யில் சேர்ந்தார். ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராகக் கருதப்பட்டார்.மாநில அரசியலில் முக்கிய தலைவராக உருவெடுத்தார். நவீன் பட்நாயக்கிற்கு பதிலாக மாநில முழுவதும் ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
இவர் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என்றும் தகவல்கள் வெளியாகின. அரசு சார்பில் அனைத்து முடிவுகளையும் பாண்டியன் எடுப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். தேர்தல் பிரசாரத்தின் போது பாஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பாண்டியன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
இதன் தொடர்ச்சியாக பிஜு ஜனதா தளம் 2024ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது. இதையடுத்து அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக பாண்டியன் அறிவித்தார்.
பின்னர் நவீன் பட்நாயக்கை சந்திக்க வி.கே.பாண்டியன் வரவில்லை. இந்த சூழலில் சமீபத்தில் நவீன் பட்நாயக் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் மீண்டும் அவர் வந்தார். மும்பை மருத்துவமனையில், நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன் உடன் இருந்து கவனித்துக் கொண்டார். ஒடிசா திரும்பியபிறகும், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. புவனேஸ்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பட்நாயக்தை வி.கே.பாண்டியன் தான் உடன் இருந்து பராமரித்து வருகிறார்.
அவர் நவீன்பட்நாயக் உடல்நிலை குறைத்து எந்த தகவலும் வெளியிடாமல்இருந்து வருவதால் பிஜேடி கட்சியினர் கடும் கோபம் அடைந்தனர். தற்போது மீண்டும் வி.கே.பாண்டியன் நவீன் பட்நாயக்குடன் நெருங்கியிருப்பது, பி.ஜே.டி., கட்சிக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
பிஜேடி கட்சி எம்எல்ஏ ரணேந்திர ஸ்வைன், வி.கே.பாண்டியனை கடுமையாக விமர்சித்து உள்ளார். வேறு சில தலைவர்களும் பாண்டியனை விமர்சித்து பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் பிஜூ ஜனதா தளம் கட்சியில் மீண்டும் பரபரப்பு கிளம்பியுள்ளது.