விஸ்வகர்மா வளர்ச்சி ஆணையம் ஒரு வாரத்தில் அரசு முக்கிய முடிவு
விஸ்வகர்மா வளர்ச்சி ஆணையம் ஒரு வாரத்தில் அரசு முக்கிய முடிவு
ADDED : பிப் 15, 2024 04:47 AM

பெங்களூரு : ''திண்டினி மவுனேஸ்வரர் கோவில், சிரசங்கி காளம்மா, கலாஞானி சித்தப்பாஜி, வீரபிரம்மேஸ்வர சுவாமி கோவில்களை நிர்வகிக்க, 'விஸ்வகர்மா வளர்ச்சி ஆணையம்' அமைப்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் அதிகாரிகள் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும்,'' என ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சட்ட மேலவையில் தெரிவித்தார்.
சட்ட மேலவையில் நேற்று, பா.ஜ., உறுப்பினர்கள் நஞ்சுண்டி, விஸ்வநாத், ஹனுமந்த் நிரானி ஆகியோர் திண்டினி மவுனேஸ்வரர் கோவில் சிரசங்கி காளம்மா, கலாஞானி சித்தப்பாஜி, வீரபிரம்மேஸ்வர சுவாமி கோவில்களை நிர்வகிக்க, 'விஸ்வகர்மா வளர்ச்சி ஆணையம்' வேண்டும் என்றனர்.
இதற்கு பதிலளித்து, ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசியதாவது:
ஹிந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட திண்டினி மவுனேஸ்வரர் கோவில் 'ஏ' பிரிவிலும்; பெலகாவி சிரசங்கி காளிகா தேவி 'சி' பிரிவிலும் வருகிறது. கலாஞானி சித்தப்பாஜி கோவில், வீரபிரம்மேஸ்வர சுவாமி கோவில் ஆகியவை தனியாருக்கு சொந்தமானவை.
அதை கைப்பற்ற நினைத்தால் பெரும் பிரச்னை ஏற்படும். எனவே, இவ்விரு கோவில்களை புனரமைக்க, கோவில் நிர்வாகிகளுடன் பேச தயாராக இருக்கிறோம்.
விஸ்வகர்மா வளர்ச்சி ஆணையம் அமைக்க, பெருமளவில் நிதி தேவைப்படும். சில கோவில்களில் ஆண்டுக்கு, 10 லட்சத்தில் இருந்து கோடிக்கணக்கில் பக்தர்கள் சென்று வருகின்றனர்.
பக்தர்கள் அதிகளவில் செல்லும் கோவில்களை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அத்துடன், துறைக்கு உட்பட்ட இரு கோவில்களை புனரமைக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

