ADDED : மார் 14, 2024 04:16 AM

கர்நாடகாவின் ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ள வனதுர்கா கோட்டை, ஒரு காலத்தில் அரசர் படையின் ஒரு பிரிவினரால் படைத்தளமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் யாத்கிர் மாவட்டத்தில் ஷாஹாபூர் தாலுகாவில் வனதுர்கா என்ற கிராமத்தில் இக்கோட்டை அமைந்து உள்ளது.
வனதுர்கா கிராமம், ஷோராபூருக்கு வடக்கேயும், ஷஹாபூருக்கு மேற்கேயும் அமைந்துள்ளது. இக்கோட்டை ஷோராப்பூர் நாயக்க வம்சத்தின் ஆட்சியாளரான கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இக்கோட்டை வனதுர்கா கேட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோட்டை ஆரம்பத்தில் அரசர் படையின் சிறிய பிரிவுக்கான படைத்தளமாக கட்டப்பட்டது. இது நாயக்க வம்சத்தின் ஆட்சியின் கீழ் உள்ள பிரதேசத்தின் புறக்காவல் நிலையமாகவும் செயல்பட்டுள்ளது.
அக்காலத்தில் அடர்ந்த காடுகளால் சூழப்பப்பட்டதால் கோட்டைக்கு வனதுர்கா என்று பெயர். உள்ளூர் மொழியில் வன என்றால் காடு என்றும், துர்கா என்றால் கோட்டை என்றும் பொருள்படுவதால், கோட்டைக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.
ஆனால் காலப்போக்கில் கோட்டையை சுற்றியுள்ள வனப்பகுதி குறைய தொடங்கியது. இன்று கோட்டை, காடுகளால் சூழப்படவில்லை. மாறாக இக்கோட்டை விவசாய வயல்களால் சூழப்பட்டு உள்ளது.
உள்ளூர் புராணத்தின்படி, வனதுர்கா கோட்டையானது, அப்போதைய சூர்பூரின் அரசரான பித்த நாயக்கரால் அவரது ராணி வெங்கம்மாம்பாவுக்காக கட்டப்பட்டது.
இக்கோட்டை இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது.
இக்கோட்டை சிறந்த கட்டுமான பணிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 30 அடி அகலமும், 12 அடி ஆழமும் கொண்ட அகழி, கோட்டையின் மூன்று பக்கங்களிலும் சூழ்ந்து உள்ளது.
இந்த அகழி, கோட்டைக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கிறது. மிக மோசமான கோடைகாலத்திலும் கூட, இங்கு எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும்.
கோட்டையின் நுழைவு வாயில், 'பிறை' வடிவில் உள்ளதால் சுலபமாக எதிரிகள் உள்ளே நுழைய முடியாது.
வனதுர்கா கிராமத்தில் இருந்து, அரை அரை கி.மீ., தொலைவில் வன துர்கா கோட்டை அமைந்து உள்ளது. சாலை வழியாகவும் இங்கு செல்லலாம்.
பெங்களூரில் இருந்து விமானம் மூலம் ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட்டில் உள்ள விமான நிலையம் செல்ல வேண்டும்.
அங்கிருந்து 210 கி.மீ., பயணம் செய்து, வனதுர்கா செல்ல வேண்டும். ஹூப்பள்ளியில் விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 217 கி.மீ., பயணம் செய்ய வேண்டும்.
ரயிலில் செல்வோர், ஷோராப்பூரில் இருந்து 47 கி.மீ., தொலைவில் உள்ள யாத்கிர் ரயில் நிலையம் செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ், டாக்சி மூலம் செல்லலாம். பஸ், கார்களிலும் கூட செல்லலாம்.

