பிரதமர் மோடியை விமர்சித்து அமெரிக்க நடிகையிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ராகுல்!
பிரதமர் மோடியை விமர்சித்து அமெரிக்க நடிகையிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ராகுல்!
ADDED : அக் 17, 2025 05:09 PM

புதுடில்லி; டிரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று நீங்கள் சொல்வது மிகவும் தவறு என்று ராகுலை அமெரிக்க பிரபல நடிகையும், பாடகருமான மேரி மில்பென் கண்டித்துள்ளார்.
அண்மையில் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா விரைவில் நிறுத்தும் என்று பேசி இருந்தார். இதை விமர்சித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த பதிவில் பிரதமர் மோடி டிரம்பை பார்த்து பயப்படுகிறார் என்று கூறி அந்த 5 விஷயங்கள் என்ன என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந் நிலையில் ராகுலின் இந்த கருத்துக்கு அமெரிக்க பிரபல நடிகையும், பாடகருமான மேரி மில்பென் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
நீங்கள் சொல்வது தவறு ராகுல். டிரம்பை கண்டு அவர்(பிரதமர் மோடியை குறிப்பிடுகிறார்) பயப்படவில்லை. அமெரிக்காவின் விளையாட்டையும், ராஜதந்திரத்தையும் அவர் புரிந்து கொண்டுள்ளார்.
அதிபர் டிரம்ப் எப்போதும் அமெரிக்க நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்துவது போல், பிரதமர் மோடியும் இந்தியாவுக்கு சிறந்ததைத் தான் செய்வார். நாட்டின் தலைவர்கள் என்பவர்கள் அப்படித்தான் செய்வார்கள். நான் அதை பாராட்டுகிறேன்.
அவர்கள் தங்களின் நாட்டுக்கு எது சிறந்ததோ அதை செய்கிறார்கள். அதை நான் பாராட்டுகிறன். இந்த தலைமையை நீங்கள் (ராகுல்) புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏன் எனில், இந்திய பிரதமராகும் வகையிலான புத்திசாலித்தனத்தை பெற்றிருக்கவில்லை.
எனவே நீங்கள் மீண்டும் இந்தியாவை வெறுக்கிறேன் என்ற உங்களின் பிரசாரத்தை தொடருங்கள். அங்கு ஒரேயொரு பார்வையாளர் மட்டுமே உள்ளார், அது நீங்கள் தான்.
இவ்வாறு தமது பதிவில் அமெரிக்க பாடகர் மேரி மில்பேன் கூறி இருக்கிறார்.
மேரி மில்பென் அமெரிக்காவின் பிரபல நடிகை மற்றும் பாடகரும் கூட. ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே என்ற பாடலை பாடியதன் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர் இந்தியர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் ஆனார். பலமுறை இந்தியா, அமெரிக்கா உறவுக்கு மிகச்சிறந்த தலைவர் பிரதமர் மோடி என்று புகழாரம் சூட்டி இருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது, மேடையில் மேரி மில்பென் இந்திய தேசிய கீதம் பாடி பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் பெற அவரது பாதம் தொட்டு வணங்கினார். இந்த வீடியோ காட்சிகள் அப்போதே இணையதளங்களில் பிரபலம் ஆகி, பெரும் வரவேற்பையும் பெற்றது, குறிப்பிடத்தக்கது.