காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 2 பேர் கைது; சீன கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் பறிமுதல்
காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 2 பேர் கைது; சீன கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் பறிமுதல்
ADDED : ஆக 18, 2025 10:17 AM

ஸ்ரீநகர்: காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சீன கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பந்திப்போராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அப் மஜித் கோஜ்ரி மற்றும் அப் ஹமீத் தார் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 2 சீன கையெறி குண்டுகள், 2 யுபிஜிஎல் கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் பயங்கரவாத செயலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.