பஞ்சாப் வினோதம்; முதல்வர் காலணிகளை பாதுகாக்க 2 போலீசாருக்கு 'டூட்டி'
பஞ்சாப் வினோதம்; முதல்வர் காலணிகளை பாதுகாக்க 2 போலீசாருக்கு 'டூட்டி'
ADDED : நவ 02, 2025 06:47 PM

சண்டிகர்: பஞ்சாப் முதல்வரின் காலணிகளை பாதுகாக்க 2 போலீசாருக்கு பணி ஒதுக்கப்பட்ட சம்பவம் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.
எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான். அடிப்படையில் ஒரு நகைச்சுவை நடிகர். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர்.
விமானத்தில் நன்றாக குடித்துவிட்டு போதையில் இருந்ததால், கீழே இறக்கி விடப்பட்டவர், டில்லி - சண்டிகர் விமானத்தில் இருந்து இறங்கிய போது குடி போதையில் ஓடுபாதையில் தவறி விழுந்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானவர்.
இந் நிலையில், பகவந்த் மானின் காலணிகளை பாதுகாக்க 2 போலீசாசருக்கு பிரத்யேகமாக பணி ஒதுக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அண்மையில் அவர், வரலாற்று சிறப்புமிக்க தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு சென்றுள்ளார்.
அப்போது, முக்த்ஸார் போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள் உத்தரவுப்படி, தலைமை காவலர் ரூப் சிங், காவலர் சர்பத் சிங் ஆகியோர் சாதாரண உடையில் முதல்வரின் காலணிகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள கேட் எண் 7ல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விவரம் அறிந்த எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இது குறித்து பாஜ செய்தித் தொடர்பாளர் பிரித்பால் சிங் பலியாவல் கூறி உள்ளதாவது;
முதல்வர் கோயிலுக்குச் செல்லும் போது சாதாரண உடையில் போலீசாரை பாதுகாப்புக்காக அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால், ஒரு முதல்வரின் காலணிகளை பாதுகாக்கும் பணிக்காக ஒருபோதும் அனுப்பி வைக்கப்படுவது இல்லை. தான் ஒரு எளிய மனிதர் என்று கூறிக் கொள்ளும் ஒரு முதல்வரின் உச்சக்கட்ட பாசாங்குத்தனம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.

