ADDED : நவ 19, 2024 11:58 PM
கே.ஆர்.புரம்; போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, கே.ஆர்.புரத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் இருந்து கே.ஆர்.புரம் வழியாக தமிழகத்தின் சென்னைக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அந்த சாலையை ஓல்ட் மெட்ராஸ் ரோடு என்று அழைக்கின்றனர்.
கே.ஆர்.புரத்தில் ரயில், மெட்ரோ ரயில் நிலையங்கள் எதிரெதிரே இருப்பதால், எந்த நேரமும் அப்பகுதி பரபரப்பாகவே இருக்கும். இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஓல்டு மெட்ராஸ் ரோட்டில் உள்ள பி.பி.எம்.பி., சந்திப்பில் இருந்து கே.ஆர்.புரம் போலீஸ் நிலையம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனை வரை செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
1.பி.பி.எம்.பி., சந்திப்பு பகுதியில் உள்ள 'யு-டர்ன் சாலை' மூடப்பட்டுள்ளது. ஓல்டு மெட்ராஸ் ரோட்டில் இருந்து கே.ஆர்.புரம் செல்லும் வாகனங்கள் டி.சி.பாளையா, அனந்தபுரா வழியாக செல்ல வேண்டும்.
2. ஐ.டி.ஐ., கேட்டில் இருந்து ஹொஸ்கோட் செல்லும் பி.எம்.டி.சி., பஸ்கள் ஸ்ரீ ராமா மருத்துவமனை அருகில் பயணியரை இறக்கி விட வேண்டும்.
3. ஐ.டி.ஐ., கேட்டில் இருந்து டீசல் ஷெட் ரோடு செல்லும் பி.எம்.டி.சி., பஸ்கள் அரசு கல்லூரி சந்திப்பு பகுதியில் 'யு டர்ன்' செய்து நேராக பணிமனைக்கு செல்லலாம்.
4. ஐ.டி.ஐ., கேட் பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள், அரசு கல்லுாரி சந்திப்பு பகுதியில், 'யு -டர்ன்' செய்து நகருக்குள் செல்லலாம்.
5. டி.சி.பாளையா பகுதியில் இருந்து நகருக்குள் செல்லும் வாகனங்கள் முனியப்பா கார்டன் பகுதியில் வலது பக்கமாக திரும்பி, அரசு கல்லுாரி சாலை வழியாக செல்ல வேண்டும்.
1. கே.ஆர்.புரம் மார்க்கெட்டில் இருந்து கே.ஆர்.புரம் செல்லும் வாகனங்கள் அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதியில் வலது பக்கமாக திரும்பி, போலீஸ் நிலையம் சாலை வழியாக நேராக செல்லலாம்.
இத்தகவலை கிழக்கு மண்டல போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

