சகோதரிகளின் ஆபாச போலி படங்கள் மூலம் மிரட்டல்: இளைஞர் தற்கொலை
சகோதரிகளின் ஆபாச போலி படங்கள் மூலம் மிரட்டல்: இளைஞர் தற்கொலை
ADDED : அக் 28, 2025 06:40 AM

பரிதாபாத்: ஹரியானாவில், மூன்று சகோதரிகளின் படங்களை ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக ஆபாசமாக சித்தரித்து, பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததால், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஹரியானாவின் பரிதாபாதைச் சேர்ந்தவர் ராகுல் பாரதி. இவர், அங்குள்ள கல்லுாரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு, மூன்று சகோதரிகள். பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்த ராகுலின் மொபைல் போனுக்கு, சில நாட்களுக்கு முன், அறிமுகமில்லாத எண்ணில் இருந்து, 'வாட்ஸாப்' அழைப்பு வந்தது.
மறுமுனையில் பேசிய நபர், தன்னை சாஹில் என அறிமுகப்படுத்திக் கொண்டார். ராகுலின் போனுக்கு, அவர் சகோதரிகளின் ஆபாச புகைப்படங்களை அனுப்பினார். அவர்களின் நிர்வாண படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களை, சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க, 20,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கப்பட்ட இந்த படங்கள் போலியானது என்பதை அறியாத ராகுல், அவற்றை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இரு நாட்களாக குடும்பத்தினர் யாரிடமும் பேசாமல், சாப்பிடாமல் தனிமையில் இருந்த அவர், துாக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இ து குறித்து ராகுலின் தந்தை மனோஜ் பாரதி போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் உறவினர் ஒருவருக்கு சம்பந்தம் இருக்கும் என, ராகுலின் தாயார் மீனாதேவி அளித்த தகவலை அடுத்து, இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

