மோசமான பின்விளைவுகள் ஏற்படும்: அச்சுறுத்தல் விடுக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
மோசமான பின்விளைவுகள் ஏற்படும்: அச்சுறுத்தல் விடுக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
UPDATED : ஆக 14, 2025 10:50 PM
ADDED : ஆக 14, 2025 07:20 PM

புதுடில்லி: போரை தூண்டும் வகையிலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் கிஸ்தான் தலைவர்கள் பேசுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, அந்நாட்டின் தவறான நடவடிக்கைகளுக்கு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு , சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை இந்தியா நிராகரித்துவிட்டது.
இதனிடையே, அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், சிந்து நதியில் அணை கட்டினால் ஏவுகணைகளை கொண்டு வீசி அழிப்போம் என மிரட்டல் விடுத்து இருந்தார்.
அதேபோல் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசும் போது, சிந்து நதிநீரை தடுக்க முடியாது. அப்படி தடுத்தால், மறக்க முடியாத வகையில் பதிலடி கொடுக்கப்படும் எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தலைவர்களிடம் இருந்து பொறுப்பற்ற போர் வெறி மற்றும் வெறுப்பு நிறைந்த கருத்துகள் தொடர்ந்து வருவது குறித்த அறிக்கைகளை நாங்கள் கண்டுள்ளோம். தங்கள் சொந்த தோல்வியை மறைக்க இந்தியாவுக்கு எதிராக மீண்டும் மீண்டும் பேசி வருகின்றனர். எந்தவொரு தவறான செயலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால், பாகிஸ்தான் தலைவர்கள் கவனத்துடன் பேச வேண்டும்.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து என்ற முடிவை இந்தியா எடுத்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாத்தை ஊக்குவித்து வருவதால் அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்துசெய்தது. இவ்வாறு அவர் கூறினார்.